📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 12, 2026 07:32 AM

தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவிடம் ஜோகூரில் திறப்பு

தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவிடம் ஜோகூரில் திறப்பு

சிங்கப்பூர் - மலேசியத் தமிழர்களின் பெருந்தலைவர், தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ. சாரங்கபாணி 1974ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இயற்கை எய்தினார்.

குடும்பத்தினர், தமிழவேளின் தளபதிகள், தொண்டர்கள் ஆகியோரின் விருப்பப்படி சுவா சூ காங் இடுகாட்டில் அன்னாரின் நினைவிடம் எழுப்பப்பட்டது.

தமிழவேளின் தலைவர் தந்தை பெரியார் தமிழ்நாட்டில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார். அவர் மறைந்த மறுஆண்டே அவரது தொண்டரான தமிழவேள் கோ. சாரங்கபாணி சிங்கப்பூரில் மறைந்தார் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு குடும்பத்தினரின் விருப்பப்படி அங்கிருந்து அகற்றப்பட்டு அவரது அஸ்தியின் ஒரு பகுதி திருமதி சாரங்கபாணி (லிம் பூன் நியோ) அஸ்தியிருக்கும் மாடத்தில் இணைத்து வைக்கப்பட்டது. அஸ்தியின் இன்னொரு பகுதி தமிழவேள் நற்பணி மன்றத்தின் பொருளாளர் பாவலர் சோ. வீ.தமிழ் மறையானின் பாதுகாப்பில் இருந்தது.

தமிழவேள் கோ. சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் விழா, 2024ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அன்று மதியமே தமிழவேளின் அஸ்தி ஜோகூர் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் திரு. ந. வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜோகூர் தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு, மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் கெபுன் தே இந்து மின் மயான இடுகாட்டில் துயிலகம் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) காலை 11 மணியளவில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்குத் தமிழவேள் துயிலகம் திறந்து வைக்கப்படுகிறது.

தொடர்புக்கு: (சிங்கப்பூர்) தமிழ்மறையான் : 8072 7052, (மலேசியா) திரு முனைவர் சுரவி: 013 - 7689379.