தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் அரிசி விலை 25 முதல் 30 சதவீதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிடுகிடு உயர்வு
தமிழ்நாட்டில் அரிசி விலை கடந்த சில மாதங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம் பருவமழை பற்றாக்குறை காரணமாக நெல் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பே என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலை உயர்வு குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் டி.துளசிங்கம் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில், சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக பொன்னி அரிசி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தட்டுப்பாடு ஏற்படாது
கடந்த சில மாதங்களில் அரிசி விலை சுமார் 25 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை உயர்வாக இருக்கக்கூடும். மழைப்பொழிவு குறைவால் அரிசி தட்டுப்பாடு வரும் என்று கூறுவது சரியல்ல. தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இன்னும் 90 நாட்களில் அடுத்தகட்ட நெல் விளைச்சல் வந்துவிடும். எனவே, அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் அரிசியின் நேற்றைய மொத்த விலை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் கடந்த 4 மாதத்திற்கு முந்தைய விலை):-
26 கிலோ பொன்னி அரிசி - ரூ.1,800 (ரூ.1,400). இதன்படி ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.69-க்கு விற்பனை ஆகிறது. 26 கிலோ இட்லி அரிசி - ரூ.1,040 (ரூ.850), 26 கிலோ சன்னரக அரிசி ரூ.1,600 (ரூ.1,200), 25 கிலோ பிராண்டு பொன்னி அரிசி விலை ரூ.1,450 முதல் ரூ.1,550 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த விலை ரூ.1,250 முதல் ரூ.1,450 வரை இருந்ததாக கூறப்படுகிறது.
பாசுமதி -சீரகச்சம்பா அரிசி
அதேபோன்று 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.1,950 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.1,450 முதல் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேபோன்று கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ.4,900-க்கு விற்பனை செய்யப்பட்ட 30 கிலோ சீரகச்சம்பா அரிசி நேற்று ரூ.5,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை வெளிச்சந்தையில் கிடைக்கும் அரிசியின் தரத்திற்கு ஏற்ப சன்னரக பொன்னி அரிசியாக வழங்கினால் மக்களுக்கு வெளிச்சந்தையில் அரிசியை விலை கொடுத்து வாங்கும் தேவை பெருமளவு குறையும். அரிசி விலை உயர்வும் தடுக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.