தமிழகத்திற்கு நீர் விடுவிப்பது கடினம்: காவிரி விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்
- சிறப்பு நிருபர் -
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், “நடப்பாண்டில் போதிய மழையின்றி வறட்சி நிலவுவதால், எங்கள் சொந்த தேவைகளுக்கே நீர் பற்றாக்குறை உள்ள நிலையில், தமிழகத்திற்கான 11 டி.எம்.சி., தண்ணீரை விடுவிப்பது கடினம்” என, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் டெல்டா பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது காவிரி நீர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 177.25 டி.எம்.சி., நீரை தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகா விடுவிக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில், காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீர் பங்கீட்டில், பற்றாக்குறையாக உள்ள 11 டி.எம்.சி., நீரை உடனே விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு இடையீட்டு மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் ஆப்ரேஷ் குமார் சிங் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி விக்ரம் நாத், “காவிரி விவகாரத்தில், ஒவ்வொரு முறையும் நீர் பற்றாக்குறை உள்ளதாக தமிழக அரசு கூறுகிறது; ஆனால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைவிட கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா தரவுகளைச் சமர்ப்பிக்கிறது. இதற்கான விளக்கம் தேவை,” என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “காவிரி ஆணையம் நிகழ்காலத் தரவுகளின்படி, மட்டுமே உத்தரவிடுகிறது; ஆனால் முந்தைய பற்றாக்குறை நீரை வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிப்பதில்லை. பற்றாக்குறை காலங்களிலும் அணைகளில் உள்ள நீரின் அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி தண்ணீரைப் பங்கீட்டுத் தர வேண்டும் என்றும், பற்றாக்குறை நீரையும் சேர்த்து கணக்கிட ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்,” என, வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், “நடப்பாண்டில் மழை பற்றாக்குறையால், பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்காதவாறு, நாங்கள் நீரைச் சேமிக்கும் நிலை உள்ளது. எனவே, தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது கடினம்,” என்றார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.