📅 Monday, 28 September 2026 IST | புரட்டாசி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 27, 2026 10:01 PM

தமிழின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் போற்றிய பெருவிழா

தமிழின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் போற்றிய பெருவிழா

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழரின் உயரிய பண்பாட்டுச் சிந்தனையைப் போற்றும் வகையில், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா Sunnyvale Bishop School-ல் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் மொழி, இலக்கியம், இசை, நாடகம் மற்றும் தமிழர் பாரம்பரியக் கலைகளின் சிறப்பை ஒரே மேடையில் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இவ்விழா, தமிழின் பெருமையையும் தமிழர் பண்பாட்டின் செழுமையையும் வெளிப்படுத்திய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

இந்த விழாவின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, மொத்தம் 201 கலைஞர்கள் மேடையேறி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களில் 160 பேர் குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரும், 41 பேர் பெரியவர்களும் ஆவர். பல்வேறு கலை, இலக்கிய மற்றும் இசை நிகழ்ச்சிகளில் அவர்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பங்கேற்று, விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

முத்தமிழின் மூன்று கூறுகளான இயல், இசை, நாடகம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சங்க இலக்கியம், சங்க இலக்கிய ஓவியம், தமிழ்ப்பேச்சு, பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, மரபுக் கலைகள், பரதநாட்டியம், சிலம்பம், பறை, தவில், சாக்ஸஃபோன், பல்வேறு இசைக்கருவிகள் மற்றும் தமிழிசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

குறிப்பாக, 160 குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர் மேடையேறி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது, தமிழின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

தாய்மொழியான தமிழை அறிந்து, கற்று, அதன் இலக்கியத்தையும் கலைகளையும் மேடையில் வெளிப்படுத்திய அவர்களின் ஆர்வமும் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. இளம் தலைமுறையினர் தமிழுடன் தொடர்ந்து இணைந்திருப்பதும், தமிழ் இலக்கியம் மற்றும் கலைகளில் ஆர்வத்துடன் பங்கேற்பதும், தமிழ் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து வாழும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியது.

இந்த முத்தமிழ் விழாவை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த கலைஞர்கள், பயிற்றுநர்கள், பெற்றோர்கள், பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பார்வையாளர்கள், புரவலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொருவரின் நேரம், உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவு ஆகியவை இணைந்ததாலேயே இந்த விழா சிறப்பாக நடைபெற முடிந்தது.

- SARITHA ANNADUARAI, Vice President-Cultural, San Francisco Bay Area Tamil Manram