தமிழ் திரையிசை: தலைமுறைகளை இணைத்த இசை நிகழ்ச்சி
இரண்டு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட அறுபது பழைய, புதிய தமிழ் திரையிசைப் பாடல்கள் ஒரு ‘மெட்லி’ தொகுப்பாக சனிக்கிழமை (செப்டம்பர் 12) சிங்கப்பூர் கலைப்பள்ளி அரங்கத்தை உற்சாகப்படுத்தின.
‘ரீஇன்கார்னேஷன்’ இசைக்குழுவின் ‘சூப்பர் சிங் அலோங்’ இசை நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு மனம் விட்டுப் பாடி, ஆடினர்.
தமிழ் இளையர் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், இளையர்கள் தமிழ் மொழி மீதான பற்றையும் ஆர்வத்தையும் கொண்டிருக்க ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குத் தெரிந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார் ‘ரீஇன்கார்னேஷன்’ குழுவின் நிறுவனரும் உள்ளூர் கலைஞருமான கௌஷிக் சுரேஷ்.
“சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்,” என்று மனம் நெகிழத் தெரிவித்தார்.
அவருடன் ‘யார் அந்த ஸ்டார்’ 2020ஆம் ஆண்டின் வெற்றியாளர் மீனாக்ஷி ஜோதிஷ், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர்’ பாடகர்கள் பூஜா வைத்தியநாதன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் மேடையேறினர்.
பழம்பெரும் நடிகை சச்சு கூட்டத்தில் காணப்பட்டார். அவர் எல்லாப் பாடல்களுக்கும் கைதட்டி மகிழ்ந்தார்.
“இம்முறை உள்ளூர் கலைஞர்களுடன் அனைவருக்கும் தெரிந்த ‘சூப்பர் சிங்கர்’ பாடகர்கள் மேடையேறியது ஒரு புதுமை,” என்றார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் அபர்ணா கௌஷிக்.
மேலும், இந்த இசை நிகழ்ச்சியில் முதல் முறையாக ஒரு சிறுவர் இசைக்குழு அங்கமும் இடம்பெற்றது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பிரனிஷா பிரபாகரன், ஜாஸ்ரிதா கார்த்திகேயன், ராஜீவ் இஷானிகா, அக்ஷரா கௌஷிக் ஆகிய நால்வர், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, காலஞ்சென்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இருவரையும் நினைவுகூரும் வகையில் ‘போறாளே பொன்னுத்தாயி’ மற்றும் ‘கொக்கு பற பற’ பாடல்களைப் பாடினார்கள்.
முன்பு நடைபெற்ற ‘ரீஇன்கார்னேஷன்’ இசை நிகழ்ச்சியை விட இம்முறை இந்தத் தொகுப்பை மிகவும் ரசித்ததாகத் தெரிவித்தார் புஷ்பா, 52.
அத்துடன் அவரது தோழி வாசுகி, 52, “தேர்ந்தெடுத்த பாடல்கள் நாங்கள் கேட்டு வளர்ந்த பாடல்கள் என்பதால் எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது,” என்றும் தெரிவித்தார்.
வெவ்வேறு பாடல்களைக் கொண்ட ‘மெட்லி’ பாணி மிகவும் தனித்துவமாக, எதிர்பாராதவிதமாக இருந்தது என்றார் மாணவி சபர்ணா, 24.
“நேரம் சென்றதே தெரியவில்லை,” என்றார்.
‘ரீஇன்கார்னேஷன்’ இசைக்குழுவின் அடுத்த இசை நிகழ்ச்சியான ‘ஒரு மாலை’ வரும் நவம்பர் 16ஆம் தேதி துபாயின் புகழ்பெற்ற ‘ஃபிர்தௌஸ் ஸ்டுடியோ’ வளாகத்தில் அரங்கேறவுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ இணைந்து உருவாக்கிய ‘ஃபிர்தௌஸ் ஸ்டுடியோ’ ஓர் இசைப்பதிவு, இசையமைப்புக் கூடமாகும்.