திமுகவிற்கு நோ... தவெக
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் 2026-27ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த நாளில் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளித்து உரையாற்றினர்.
மாநிலத்தின் நிதி மேலாண்மை, நகர்ப்புற நிர்வாக மேம்பாடு, டிஎன்பிஎஸ்சி சீர்திருத்தங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் ஒழுங்குமுறை விவகாரங்கள் உள்ளிட்ட மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்துச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆய்வு செய்த ஆளுநர் அர்லேக்கர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ) புதிய கார் வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா உட்பட 12 மசோதாக்களுக்குத் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.
இதில் 6 மசோதாக்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 4 நாட்களுக்குள்ளும், 5 மசோதாக்களுக்கு 5 நாட்களுக்குள்ளும் ஆளுநர் மிக விரைவாக ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டம் தொடர்பான ஒரு மசோதா மட்டும் ஆளுநரின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள் பின்வருமாறு:
1. தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட மசோதா, 2026 (Tamil Nadu Town and Country Planning Amendment Bill).
2. எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பான சட்ட மசோதா : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLAs) கார் வழங்கும் வசதி மற்றும் சம்பளப் படிகள் தொடர்பான திருத்த மசோதா (Tamil Nadu Payment of Salaries Amendment Bill).
3. புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையச் சட்ட மசோதா (Tamil Nadu Investment Promotion Commission Act).
4.டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்புக்கூட்டு வரி விதிக்கும் (VAT) திருத்த மசோதா (Tamil Nadu Value Added Tax Amendment Bill).
5.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா
6. விவசாய விளைபொருள் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறை) இரண்டாவது திருத்த மசோதா (Agricultural Produce Marketing Regulation Second Amendment Bill).
7.அரசுப் பணியாளர் தேர்வாணையம் திருத்த மசோதா : உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர்களை TNPSC மூலம் தேர்வு செய்வதற்கான மசோதா (TNPSC Recruitment for Urban Local Bodies Bill).
8.அரசின் நிதிச் செலவுகளுக்கான தமிழ்நாடு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மசோதா
9. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்த மசோதா.
10. ஊராட்சிகள் சட்ட திருத்த மசோதா
11. மாநிலத்தில் தொழில்கள் மற்றும் வணிகத்தை எளிதாக்குவதற்கான திருத்த மசோதா
12. சில துறை சார்ந்த நிதி மற்றும் சட்ட திருத்த மசோதாக்கள்
தற்போது கவர்னர் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள், தற்போது சட்டங்களாகிவிட்டன. அவை அனைத்தும் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு குறுகிய காலத்திலேயே ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அதேவேளை, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்ட மசோதா மட்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில், தனியார் பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிலப்பரப்பு சென்னையில் 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகளில் 18 ஏக்கராகவும், மற்ற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். உயர்கல்வியில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரிப்பதால் ஏழை, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
திமுக ஆட்சிக் காலத்தில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அப்போது தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி ஒப்புதல் அளிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாக மாநில அரசு குற்றம்சாட்டியது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அப்போது, மறுபரிசீலனை செய்து மீண்டும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கை "சட்டவிரோதமானது மற்றும் பிழையானது" என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது இந்த நிலையில், தவெக அரசு அமைந்த பிறகு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் அர்லேகர் குறுகிய காலத்திலேயே ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது