தி.மு.க., செந்தில் பாலாஜி மீது சொந்த கட்சியினரே புகார்
கோவை: கட்சி மறுசீரமைப்பு பணியில், தலைமையின் உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக, கோவை தி.மு.க.,வினர் புகார் கூறுகின்றனர்.
சட்டசபை தேர்தல் தோல்வியால், தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக கிளை முதல், மாவட்டம் வரை மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவை தி.மு.க.,வும், மூன்று மாவட்டங்களில் இருந்து ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. மேலும், கள ஆய்வு செய்து, சீரமைப்புக்கு பரிந்துரை செய்ய, மாவட்ட வாரியாக பார்வையாளர்களை கட்சி தலைமை நியமித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, முன்னாள் எம்.பி., பார்த்திபன் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோவையில் கள ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புறக்கணித்தது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இது குறித்து, தி.மு.க., வினர் கூறியதாவது: தேர்தலில் வென்ற பின், தொகுதி பக்கமே செந்தில் பாலாஜி வரவில்லை; தன் கட்டுப் பாட்டில் கோவை மாவட்டம் இருக்க வேண்டுமென அவர் நினைக்கிறார்; மாவட்டச் செயலர்களை அழைத்து, தனக்கு ஏற்றவாறு கிளை, ஒன்றியம், நகரம் ஆகியவற்றை பிரிக்கச் சொல்கிறார். அதை செய்யத்தான், இருவரை கட்சி தலைமை நியமித்துள்ளது.
அவர்கள் தலைமைக்கு பரிந்துரை வழங்கும் முன்னரே, அவசரமாக அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த செந்தில் பாலாஜி நினைக்கிறார்.
கோவையை பொறுத்தவரை, 'யார் பொறுப் பாளராக வந்தாலும், நான் சொல்வதை தான் தலைமை கேட்கும்' என்ற மனநிலையில் செந்தில் பாலாஜி இருக்கிறார். மூத்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் கொடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
செயற்குழு கூட்டத்தில் பேசிய ரேகா பிரியதர்ஷினி, ''பார்வையாளராக வந்திருப்பவர்கள், சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டு செல்வர் என, சிலர் பேசி வருவதாக அறிந்தோம். ''நாங்கள் அதற்காக வரவில்லை; கட்சியினரிடம் பேசி, ஆய்வு செய்து, கட்சிக்கு எது நல்லதோ அதை மட்டுமே பரிந்துரைப்போம்,'' என்றார்.