தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய் ‘ரோட் ஷோ’
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, தமிழக முதல்வர் விஜய் தாராபுரத்தில் ‘ரோட் ஷோ’ தொடங்கி நடத்தி வருகிறார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு ரோட் ஷோ மேற்கொள்வதற்காக, கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்த முதல்வர் விஜய், தாராபுரம் - உடுமலை சாலையில் உள்ள மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கு முதல்வர் விஜய்க்கு அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
ஹெலிபேடில் இறங்கி பிரச்சார வாகனத்துக்கு மாறிய முதல்வர் விஜய், அங்கிருந்தே தவெக வேட்பாளர் சத்யபாமாவுடன் ‘ரோட் ஷோ’ மேற்கொண்டு வருகிறார். முதல்வர் விஜய்க்கு வரவேற்பளிக்க வழிநெடுகிலும் தவெகவினர் மற்றும் மக்கள் ஆரவாரத்துடன் நின்றபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல்வர் விஜய்யின் பிரச்சாரத் திட்டம்:
தாராபுரம் - உடுமலை சாலையில் உள்ள ஹெலிபேடில் இருந்து மூலனூர் வரை சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’ சென்று வாக்கு சேகரிக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி தாராபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிருஷ்டிசிங் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செப்.30-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், இன்று 2-வது முறையாக தாராபுரத்துக்கு வந்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவைக்குக் காலை 9.10 மணிக்கு விஜய் வருகை தந்தார். அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக தாராபுரம் வந்தார். பிரச்சாரம் முடிந்து மாலையில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து, விமானத்தில் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.