த.வெ.க., அரசின் வெற்றியான திட்டம், மின்தடை மட்டுமே: தினகரன் பேச்சு
மதுராந்தகம்:''த.வெ.க., அரசின் வெற்றியான திட்டம், மின்தடை திட்டம் மட்டும் தான்,'' என, அ.ம.மு.க., பொது செயலர் தினகரன் காட்டமாக முதல்வர் விஜயை விமர்சித்து பேசினார்.
தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் முனுசாமி வழிகாட்டுதலின்படி, தொகுதி பொறுப்பாளர் மணியன், எம்.எல்.ஏ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மதுராந்தகம் நகராட்சியில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று, நடந்தது. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, அ.ம.மு.க., பொது செயலர் தினகரன், பிரசாரம் செய்தார்.
அப்போது, தினகரன் பேசியதாவது:
இந்த இடைத்தேர்தல் வருவதற்கு யார் காரணம் என மதுராந்தகம் தொகுதி மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஓட்டு கேட்க ஊருக்குள் செல்ல விடாமல், மக்கள் விரட்டியடிக்கின்றனர்.
தமிழகத்தில் குதிரை பேரத்தை நடத்தியதே முதல்வர் விஜய் தான். குதிரை பேரம் விசாரணை குறித்து, கவர்னர் உத்தரவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.
விசாரணை நடத்தினால் துாய சக்தி என, தம்பட்டம் அடிக்கும் தம்பி முதல்வர் விஜய் தான், முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார்.
அ.தி.மு.க.,வை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
அதனால் தான், ஜெயலலிதா போற்றி வளர்த்த கட்சியை பார்த்து, தீர்ந்து போன சக்தி என விஜய் கூறியுள்ளார். த.வெ.க.,அரசு, அனைத்தையும் தனியார் மையமாக மாற்ற முயற்சிக்கிறது.
விஜய் என்கிற குள்ள நரி, தந்திரமாக அ.தி.மு.க.,வின் தொண்டர்களை அழித்துவிடலாம் என நினைக்கிறார்.
த.வெ.க., எம்.எல்.ஏ.,க்களே, விஜயின் காலை வாருவார்கள். அக்கட்சியின் வெற்றியான திட்டம், மின்தடை திட்டம் மட்டும் தான்.
இந்நிகழ்வில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஆறுமுகம், அ.ம.மு.க., மாவட்ட செயலர் சதீஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.