📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 20, 2026 07:30 PM

டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம்; பலத்த பாதுகாப்பு

டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம்; பலத்த பாதுகாப்பு

டெல்லியில் அபிஜீத் திப்கே தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மதியம் 1 மணியளவில், திப்கே தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆதரவாளர்கள் திரண்டு வரவுள்ளனர். இதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

வாகனங்கள் பரிசோதனை

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சொன்ன கருத்துகளின் பின்னணியில், அபிஜீத் திப்கேவால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'என்ற பக்கம் தொடங்கப்பட்டது. அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனை பின்தொடர தொடங்கினர்.

ஒரு கட்டத்தில், பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதனால், மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப்பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்த பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது.

2-வது முறையாக

சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியது. அதற்கு முன்பு, தனது அமைப்பை விரிவுபடுத்த மூன்று புதிய செய்தி தொடர்பாளர்களை நியமித்தது.

இதன்படி, புலனாய்வு பத்திரிகையாளர் சவுரவ் தாஸ் தலைமை செய்தி தொடர்பாளராகவும், திரைப்பட இயக்குநர் விஜேதா தஹியா மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் செய்தி தொடர்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 6-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து அன்று காலை இந்தியாவுக்கு திரும்பினார்.