ரியாத் விமான நிலைய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு: 11 இந்தியர்கள் உட்பட 300 பேர் படுகாயம்
ரியாத்: சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தைக் குறி வைத்து ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் 11 பேர் இந்தியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதலில் காயமடைந்த 11 இந்தியர்களின் உடல்நிலை குறித்து சவுதி அதிகாரிகளிடமும், அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், பொதுமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், சவுதி அரேபியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இந்தியா அந்நாட்டோடு உறுதுணையாக நிற்கும் எனவும், தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் ரியாத் விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவாகும். சவுதி அரேபியா தங்கள் மீதான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால் இன்னும் கடுமையான தாக்குதல்கள் தொடரும் என ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் மெக்கா மற்றும் மதினா விமான நிலையங்களைத் தவிர்த்து சவூதி அரேபியாவின் பிற விமான நிலையங்களையும் வான்வெளியையும் பயணிகள் மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு தணிக்கைக்காக விமான நிலைய செயல்பாடுகளைச் சவூதி அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரியாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆன்லைன் வழிக் கல்வி அறிவிக்கப்பட்டுள்ளது.