📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 20, 2026 07:41 PM

புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டாடிய உபின் நாள் 2026

புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டாடிய உபின் நாள் 2026

சிங்கப்பூரின் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து தப்பித்து, இயற்கையோடு ஒன்றிணைய விரும்பும் இயற்கை ஆர்வலர்களுக்கு புலாவ் உபின் ஒரு சிறந்த புகலிடமாகத் திகழ்ந்து வருகிறது.

சிங்கப்பூரிலிருந்து வெறும் 15 நிமிடப் படகுப் பயணத் தொலைவில் அமைந்துள்ள அந்தத் தீவின் வரலாற்றையும் அதன் இயற்கை வளத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ‘உபின் நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் தலைமையில் சனிக்கிழமை (ஜூன் 20) இவ்வாண்டிற்கான உபின் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

உபின் தீவின் பல்லுயிர்ச்சூழல் குறித்த புதிய தகவல்களைத் திரு டான் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, தேசிய பூங்காக் கழகத்தின் குறிப்பிட்ட இனங்களை மீட்டெடுக்கும் திட்டத்தின்படி, தீவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ‘கிரிப்டிக் பெயின்டட் தவளை’ எனும் அரியவகை செம்மஞ்சள் நிறத் தவளை இனத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அவர் விவரித்தார். “இயற்கையோடு நாம் இணைந்து வாழ வேண்டும். இந்தத் தவளையின் நல்வாழ்வு, சிங்கப்பூரின் பல்லுயிர்ச்சூழல் எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதற்கான ஓர் அடையாளம்,” என்று தேசிய பூங்காக் கழகப் பாதுகாப்புப் பிரிவின் குழு இயக்குநர் லிம் லியாங் ஜிம் கூறினார்.

உபின் தீவில் மேற்கொள்ளப்பட்ட பல்லுயிரியல் ஆய்வுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மின்னிலக்கப் பதிப்பையும் (e-publication) அவர் அறிமுகப்படுத்தினார். அதில், அறிவியல் உலகிற்கு முற்றிலும் புதிய இரு உயிரினங்களும், சிங்கப்பூரில் இதற்குமுன் பதிவு செய்யப்படாத 26 புதிய உயிரினங்களும் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

“இத்தகைய தகவல்களைப் பதிவுசெய்யும் முதல் வெளியீடு என்பதால் இந்த வெளியீடு மிகவும் முக்கியமானது,” என்று திரு டான் குறிப்பிட்டார்.

தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜாவும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உபின் நாள் விழாவைச் சிறப்பித்தார்.

15வது முறையாகக் கொண்டாடப்பட்ட உபின் நாள், ஜூன் 8 முதல் ஜூன் 20 வரை கொண்டாடப்பட்ட ‘பெஸ்தா உபின்’ (pesta Ubin) விழாவின் இறுதி நாளாகவும் அமைந்தது.

‘தீவைப் பகிர்வோம், எதிர்காலத்தை வடிவமைப்போம்’ என்ற கருப்பொருளைக் கொண்ட அந்த விழாவில், புகைப்படம் எடுத்தல், பறவைகளைத் தேடிப் பார்க்க நடைகள், பாரம்பரியக் கம்பத்து விளையாட்டுகள் போன்ற நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடும் வகையில் 40க்கும் மேற்பட்ட சுவாரசியமான நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. சிங்கப்பூரில் இருக்கும் கடைசிக் கம்பங்களையும் இயற்கை வளங்களையும் ரசிக்க அந்த விழா ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் நான்கு வாரங்கள் நீடிக்கும் இந்தப் பெருவிழா, தீவின் வாழ்க்கையைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளவும், அதன் தனித்துவமான அழகை ரசிக்கவும், அங்குள்ள வனவிலங்குகளைக் கண்டறியவும் பார்வையாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது.