புறக்கணிப்பு, வாக்குவாதம், சாலை மறியல்: திருவள்ளூர் கிராம சபை கூட்டங்களில் களேபரம்
திருப்பாச்சூர்: திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், காந்தி ஜெயந்தி தினமான நேற்று, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. மக்கள் புறக்கணித்ததாலும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலும், பல இடங்களில் கூட்டம் களேபரத்தில் முடிந்தது.
திருப்பாச்சூரில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் வராதாதால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணித்தனர். பின், அதிகாரிகள் வந்ததால், ஒரு மணி நேரம் காலதாமதமாக கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி இல்லாததால், சிரமப்பட்டு வருவதாக கூறி, மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ள 5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
வயலுார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாக கூறி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஊராட்சி பகுதியில் குடிநீர் முறையாக கிடைக்கவில்லை. கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும் என கேட்டு, ஊராட்சி செயலரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், மும்முடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோபிநாத் என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம், கடந்த 2020 – 24ம் ஆண்டு ஊராட்சியில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல் பதிவுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டார்.
இதை கண்டித்து, ஆறாவது வார்டு முன்னாள் பெண் உறுப்பினரின் கணவர் ராஜேஷ், சமூக ஆர்வலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணி மேற்கொண்ட மப்பேடு சப் – இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சமாதானப்படுத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அஸ்வரேவந்தாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், மஞ்சூர்கண்டிகை அருந்ததியர் காலனியை சேர்ந்த மக்கள், தங்களுக்கு வீட்டு மனை வழங்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், சாலை வசதி, அங்கன்வாடி மையம் அமைத்தல் உள்ளிட்ட வசதிகள் கேட்டு, பெரியபாளையம் – தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின், போலீசார் சமாதானப்படுத்தியதால் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அழிஞ்சிவாக்கம், ஆலப்பாக்கம் ஊராட்சிகளில், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் கணக்கு வழக்குகளில் குளறுபடி என, களேபரத்துடன் கிராம சபை கூட்டம் நடந்து முடிந்தது.
களாம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பங்கேற்று, குடிநீர், சாலை வசதி உள்ளதா என, மக்களிடம் கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், திருவள்ளூர் கலெக்டர் கவிதா உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டையில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், நெடும்பரம் ஊராட்சியில், அதிகாரிகள் தாமதமாக வந்ததால், அதிருப்தி அடைந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெரியகளக்காட்டூர் ஊராட்சியில், கடந்த ஆக., 15ம் தேதி நடக்காத கிராம சபை கூட்டத்தை நடந்ததாக பொய்யாக கையெழுத்து பெற்ற அதிகாரிகளை கண்டித்து, தக்கோலம் – திருவாலங்காடு நெடுஞ்சாலையில், 200க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
அதேபோல், திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், வருவாய் துறையினரை கண்டித்து, மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர்.