📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 15, 2026 02:31 AM

படம் OUT... பாட்டு HIT..விஜயகாந்தை நினைவூட்டும்....இளையராஜாவின் இசை மழை!

படம் OUT... பாட்டு HIT..விஜயகாந்தை நினைவூட்டும்....இளையராஜாவின் இசை மழை!

படம் OUT... பாட்டு HIT..விஜயகாந்தை நினைவூட்டும்....இளையராஜாவின் இசை மழை!

விஜயகாந்த் நடித்த ‘அகல்விளக்கு’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே’ பாடலின் உருவாக்கம், இளையராஜாவின் இசை, கங்கை அமரனின் வரிகள், ஜேசுதாஸ்–ஷைலஜாவின் குரல் என அந்தக் காலத்து இனிமையான இசை அனுபவத்தை நினைவுகளுடன் பகிரும் பதிவு.

கேப்டன் விஜயகாந்த் கட்சி தொடங்கியதற்குப் பிறகு ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாட்டு தெருவுக்குத் தெரு லவுட் ஸ்பீக்கரில் அலறியது. அவரின் மறைவின்போது, ‘ஏழைகள் வாழ நீ செய்த தியாகம்’ என்கிற ‘பூந்தோட்டக் காவல்காரன்’ பாடலும் இளையராஜாவின் குரலும், கேப்டனை இழந்துவாடிய லட்சக்கணக்கான ரசிகர்களையும் மக்களையும் பாடலுடன் கலந்து இரண்டறக் கலந்து அழவைத்தது.

‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் அறிமுகமான விஜகாந்துக்கு ‘தூரத்து இடிமுழக்கம்’ எனும் படம் வந்தது. அதையடுத்து ‘அகல்விளக்கு’ படத்தில் ஷோபாவுடன் நடித்தார். இந்தப் படத்தில் வந்த ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே..’ என்ற பாடல், இன்றைக்கும் நம்மை நினைவலைகளில் நீந்தச் செய்யும் பாடலாக அமைந்திருக்கிறது. மூன்று பாடல்களுக்கும் இளையராஜாதான் இசை. கங்கை அமரன் தான் பாட்டு. ‘சிந்திய வெண்மணி’ மட்டும் கவிஞர் வாலி எழுதினார்.

‘அகல்விளக்கு’ படம் வெளியானபோது, விஜயகாந்துக்கு ரசிகர்கள் பெருக்கெடுத்து வந்துவிடவில்லை. அதேபோல் டெக்னிக்கலாகவும் காட்சி அமைப்பிலும் பல குளறுபடிகளும் தெளிவின்மையும் இருந்தன.பாவம் தயாரிப்பாளர்... ‘பணமில்லைபோல...’ என்று பிறகு நினைத்துக்கொண்டேன். அன்றைய தேதிக்கு அதிக சம்பளம் இளையராஜாவுக்கும் ஷோபாவுக்கும்தான். இதில் இளையராஜா, தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து கொடுப்பதை வாங்கிக்கொள்வார். ஏன்... வாங்காமல் கூட இசையமைத்திருக்கிறார்.

‘அகல்விளக்கு’ என்றொரு படம் வந்தது என்பதை வெளிச்சத்தில் தேடினாலும் கண்டறியமுடியாது. ‘இப்படியொரு படம் வந்துச்சா?’ என்று கேட்பவர்களே அதிகம். ‘என்னது... விஜயகாந்த் ஹீரோவா?’ என்று புருவம் உயர்த்தியவர்களே அதிகம். ஆனால் இந்தப் படத்தை திருச்சி அரியமங்கலம் சரோஜா தியேட்டரில் பார்த்தபோது எனக்கு பதினொரு வயது. மக்கள் நலன், பொதுப்பணி, அரசியல், மதுரை மேயர், குடும்பத்தினர் ஊழல், காதல், சாகும்வரை உண்ணாவிரதம் என்றெல்லாம் கதைபோகும். சொல்லப்போனால், விஜயகாந்த், அரசியல் பேசிய முதல் படமும் இதுவாகத்தான் இருக்கும். விஜயகாந்தின் திரைவாழ்வில் பாடல் ஹிட்டானதென்றால், அது ‘ஏதோ நினைவுகள்’ பாடலாகத்தான் இருக்கும்.

கங்கை அமரன் பாடல் எழுதியிருப்பார். கேஜே.ஜேசுதாஸ், எஸ்பி.ஷைலஜா பாடியிருப்பார்கள். பாதிக்கன்னம் வரை கிருதா, கால் தாண்டியும் இரண்டடிக்கு நீண்டுகொண்டிருக்கும் பெல்பாட்டம். உள்ளங்கை அகலத்துக்கு பெல்ட் என்று பெல்பாட்டம் ஸ்டைலை இந்தப் பாடலில் பார்க்கலாம்.

ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்…..ம்ஹீம்ம்...எனும் ஹம்மிங்கில் நம்மைச் சரணடையை வைத்திருப்பார் இளையராஜா.

ஏதோ…. நினைவுகள்கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவேகாற்றோடு காற்றாகவேதினம் காண்பதுதான் ஏதோஏதோ….. நினைவுகள்கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவேகாற்றோடு காற்றாகவேதினம் காண்பதுதான் ஏதோ...

பாடலுக்கு நடித்திருக்கும் விஜயகாந்துக்கும் ஷோபாவுக்கும் சோகம் இருக்கிறதோ இல்லையோ... நமக்குள் சோகப்பந்தினை சுகமாய் உருளவைக்கும் வித்தையைச் செய்திருப்பார் கங்கை அமரன். ‘காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே’ என்று பாடும்போது, ஒரு சில்லிப்பை உணருவோம். அடுத்து...

மார்பினில் நானும்மாறாமல் சேரும்காலம்தான் வேண்டும்…..ம்ம்ம்வான்வெளி எங்கும்என் காதல் கீதம்வாழும் நாள் வேண்டும்…..ம்ம்ம்தேவைகள் எல்லாம் தீராத நேரம்தேவன் நீ வேண்டும்…..ம்ம்ம்சேரும் நாள் வேண்டும்…..ம்ம்ம்ஏதோ….. நினைவுகள்கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவேகாற்றோடு காற்றாகவே...

மெல்லிசையாகே பாடல் முழுவதும் நிறைந்திருக்கும். அந்தக் கால ஸ்லோமோஷனும் டூயட் பாடலுக்கு துணையாக இருக்கும். வாத்தியங்கள் அதிகம் பயன்படுத்தாமல், நம்மை பத்துப்பைசா செலவு இல்லாமல் காவிரிக்கரைக்கு அழைத்துப்போய் நிறுத்தியிருப்பார் இசைஞானி. ’தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் சேரும் நாள் வேண்டும்’ என்று நாயகியின் எண்ணத்தை கங்கை அமரன் பிரதிபலிக்க, ‘அம்மா ஷைலஜா... இந்தப் பாட்டுல சில இடங்கள்ல ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்.னு சேத்துக்கணும்’ என்று இளையராஜா பாடிக்காட்டியிருப்பார் போல..! இந்தப் பாட்டு ஐஸ்க்ரீம் என்றால்,அந்த ‘ம்ம்ம்’ அதன் உச்சியில் வைத்த செர்ரிப்பழம்!

நாடிய சொந்தம்நாம் காணும் பந்தம்இன்பம் பேரின்பம்…..ம்ம்ம்நாளொரு வண்ணம்நாம் காணும் எண்ணம்ஆஹா ஆனந்தம்…..ம்ம்ம்காற்றினில் செல்லும்என் காதல் எண்ணம்ஏங்கும் எந்நாளும்….ம்ம்ம்ஏக்கம் உள்ளாடும்…..ம்ம்ம்ஏதோ….. நினைவுகள்கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவேகாற்றோடு காற்றாகவே..!

’காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும்..’ என்ற வரிகளில் அற்புதமான கவிஞர் என்பதை நிரூபித்திருப்பார் கங்கை அமரன்.சரோஜா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வரும்போது, விஜயகாந்த், ஷோபாவை மனதில் இருந்தபடி உசுப்பிவிட்டுக் கொண்டே இருந்தது இந்தப் பாட்டு. வழிநெடுக... ‘ஏதோ நினைவுகள் கனவுகள்... லலலலா, லலலல்லா’ என்று வார்த்தை தெரியாமல், ‘லலலலா’ போட்டு, திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டே வந்தேன். மறுநாள், அடுத்தநாள் என்று பாடிக்கொண்டே இருந்தவன், ஞாயிற்றுக்கிழமை கூடுகிற ரயில்வே சந்தைக்குச் சென்று, பாட்டுப்புஸ்தகம் விற்கும் பாய் மாமாவிடம் ‘அகல்விளக்கு’ பாட்டுப்புஸ்தகம் கேட்டேன். ’புதுப்படமா? அந்தக் கட்டுல இருக்கு. இந்தப் படம் இருக்குதானு தெரியலை.

இப்படியொரு படம் வந்துச்சா தம்பீ’ என்றார். நான் மனதுக்குள் திட்டிக்கொண்டே தேடினேன். என் முகத்தில் சட்டென்று ஒளிவெள்ளம். பிரகாசம். ஐந்துபைசாவை ஸ்டைலாகக் கொடுத்துவிட்டு, கையில் பாட்டுப்புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு, ‘ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே’ என்று சத்தமாக பாடிக்கொண்டே வந்தேன். நல்லவேளையாக அங்கே ஜேசுதாஸும் ஷைலஜாவும் இல்லை. நான் பிழைத்தேன்.

இன்றைக்கும் தினமும் பல் துலக்குவது போல், குளிப்பது போல், ஒருமுறையேனும் இளையராஜாவின் ‘ஏதோ நினைவுகள்’ கேட்டுவிடுவேன். ஏதேதோ நினைவுகளில் மூழ்கிபோவேன். கேட்டால், நீங்களும் மூழ்கிவிடுவீர்கள்!