போலீஸ் அதிகாரிகளுக்கு தங்க கட்டிகள் பரிசு வழங்கிய கிரானைட் வீரமணி
- நமது நிருபர் -
போலீசாரிடம் வீரமணி அளித்துள்ள வாக்குமூலத்தில், 'குற்றத்தை மறைக்க, பணமாக வாங்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், போலீஸ் அதிகாரிகள், என்னிடம் இருந்து பரிசாக தங்க கட்டிகள் வாங்கினர். இதை, இடைத்தரகராக செயல்பட்ட, ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி மகன் பிரகாஷ் வாங்கி கொடுத்தார்' என, தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 'கிரானைட்' வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கடந்த 2004ல் வீரமணி, பிளஸ் 1 மாணவியின் கல்விக்காக உதவி செய்தார். அந்த ஆண்டு, மாணவிக்கு தீபாவளி பரிசு வழங்குவதாக அழைத்து சென்று, தேனாம்பேட்டையில் சொகுசு வீடு ஒன்றில் பாலியல் வன்முறை செய்தார். இதனால், அம்மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தன் உதவியாளர் வாயிலாக, மாணவியின் இறுதிச்சடங்கிற்கு, அவரது தாயிடம், 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் செய்தார். பின், மாணவியின் உறவினரின் திருமணத்திற்கு, 1.50 லட்சம் ரூபாய் கொடுத்தார். இதெல்லாம் தன் மீதான குற்றம் வெளியே தெரியாமல் இருக்க, வீரமணி செய்த தந்திரம் என, தற்கொலை செய்த மாணவியின் தாய், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகார், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள், வீரமணி மீது நேற்று, மூன்றாவது 'போக்சோ' வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு முன், 2019 மற்றும் 2024ல், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவர் மீது இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வீரமணி மீதான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான தேன்மொழி, திஷா மிட்டல், எஸ்.பி., முத்தரசி, துணை கமிஷனர் கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக கீதாஞ்சலி, டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதி உள்ளார். இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டே வீரமணி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து, விசாரணை முடித்து வைக்கப்பட்டது கீதாஞ்சலிக்கு தெரியும். இதனால், அவர், எஸ்.ஐ.டி., குழுவில் இடம்பெறுவது சர்ச்சையை கிளப்பியது. அதனால், விடுவிக்கப்பட்டுள்ளார். குழுவில் புதிதாக கீதா என்ற துணை கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.