📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 01, 2026 03:04 PM

‘பணம் வேண்டாம்’: பிரதமருக்குக் கடிதம் எழுதிய ‘சுட்டி’ சிறுமி

‘பணம் வேண்டாம்’: பிரதமருக்குக் கடிதம் எழுதிய ‘சுட்டி’ சிறுமி

சிங்கப்பூரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி சாரா, பிரதமர் லாரன்ஸ் வோங்குக்குச் சுட்டித் தனமாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

“தனக்கு வேறு உடன்பிறப்புகள் வேண்டாம்” என்று திருவோங்குக்கு சிறுமி கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

சிறுமியின் கையால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவரது தாயார் ஹுமைரா சுஹைமி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

“எனக்கு அக்காவாக இருக்க விருப்பமில்லை. உடன்பிறப்புகள் பிறந்தால் தாயின் அருகில் தூங்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்ற கவலை உள்ளது,” என்று சாரா கடிதத்தில் குறிப்பிட்டார்.

“நீங்கள் எங்களுக்கு நிறைய பணம் கொடுக்க விரும்பினாலும், எங்களுக்கு அதிகப் பணம் தேவையில்லை,” என்று அவர் எழுதினார்.

“தனது அண்ணன் ஆதாம் தம்பி அல்லது தங்கை வேண்டும் என்று கேட்டால் அவர் பேச்சைக் கேட்க வேண்டாம்,” என்றும் சாரா குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஹுமைரா அந்த ஆறு வயது சிறுமியிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகக் கேலி செய்ததிலிருந்து இது தொடங்கியது.

இது பொய் என்பதை உணர்ந்த சிறுமியை ஏமாற்ற, அவரது தாயார் அண்மையில் நடந்த தேசிய தினப் பேரணி உரையில் திரு வோங் சொல்லிய விவரங்களை விவரித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

“சிங்கப்பூரர்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வோங் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்காகப் பிரதமர் தங்கள் குடும்பத்திற்கு அதிகப் பணம் கொடுப்பார்,” என்றும் சாராவிடம் தாய் கூறியுள்ளார்.

இது சாராவை பிரதமருக்குக் கடிதம் எழுதத் தூண்டியது.

கடிதத்திற்குப் பிரதமரும் பதிலளித்துள்ளார்.

“சாரா குடும்பத்தில் இளையவளாகவே இருப்பதற்குத் தனது அனுமதி தேவையில்லை,” என்று பிரதமர் உறுதியளித்தார்.

“குழந்தைகளை வளர்ப்பதற்குச் சிங்கப்பூர் ஒரு நல்ல இடமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வோம். குடும்பங்கள் இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற முடிவு செய்தாலும் சரி,” என்று பிரதமர் மின்னஞ்சல் வழிப் பதில் கடிதம் அனுப்பினார்.