📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 06, 2026 01:01 PM

“பெட்டி வேட்பாளருக்கு ஆதரவு... செவிலியர்களுக்கு அடக்குமுறையா?” உதயநிதி காட்டம்!

“பெட்டி வேட்பாளருக்கு ஆதரவு... செவிலியர்களுக்கு அடக்குமுறையா?” உதயநிதி காட்டம்!

“பெட்டி வேட்பாளருக்கு ஆதரவு... செவிலியர்களுக்கு அடக்குமுறையா?” உதயநிதி காட்டம்!

செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணி நிரந்தரம்,பணிப் பாதுகாப்பு,சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். தங்களது வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராடியவர்களை காவல்துறையின் மூலம் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அனைத்து அரசியல் தலைவர்கள் தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

செவிலியர்கள் மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனங்களை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். அதில் பதிவிட்டுள்ளதாவது, "பணி நிரந்தரம் - சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர். ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது - மின்சாரத்தை நிறுத்துவது - உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் - மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் - அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.

செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு.

குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா? பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்? செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.

அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார்".