பேருந்துகளில் அசௌகரியம் விளைவிக்கும் பயணிகளுக்கு அபராதம்
பேருந்துகளில் இசையைச் சத்தமாக ஒலிக்கச் செய்வது, இருக்கைகளின் மீது கால்களை வைப்பது போன்ற பிறருக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்குப் புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல் $500 வரை அபராதம் விதிக்கப்படலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.
பொதுப் போக்குவரத்துப் பயணங்களை மேலும் பாதுகாப்பானதாகவும் சௌகரியமானதாகவும் மாற்றுவதற்காக இந்தப் புதிய நடவடிக்கைகள் கொண்டுவரப்படுகின்றன.
அதேவேளையில், பேருந்து முனையங்கள் மற்றும் இடைநிலையங்களில் தடங்கலோ ஆபத்தோ ஏற்படுத்துவது அல்லது பேருந்து அல்லது பேருந்து நிலையங்களில் எந்தப் பகுதியையாவது அசுத்தப்படுத்துவது போன்ற கடுமையான குற்றங்களுக்கு அதிகபட்சமாக $5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 21) தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்து என்பது அனைவரும் பகிர்ந்து பயன்படுத்தும் இடம் என்பதால், நற்பண்பும் இனிமையும் நிறைந்த பயணச் சூழலை உறுதிசெய்வதில் ஒவ்வொரு பயணிக்கும் பங்கு உண்டு என்பதை ஆணையம் சுட்டிக்காட்டியது.
இருப்பினும், கவனக்குறைவாகச் செயல்படும் பயணிகளைக் கையாள்வதில் பொதுப் பேருந்து நிறுவனங்களுடன் ஆணையம் தொடர்ந்து இணைந்து செயல்படும்.
குறிப்பாக, உடல்நலக் குறைபாடு அல்லது மனநலப் பாதிப்பு உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை நடைமுறைப்படுத்த, நான்கு பொதுப் பேருந்து நிறுவனங்களைச் சேர்ந்த பயணச்சீட்டுப் பரிசோதனை அதிகாரிகள், பேருந்து நிலைய ஊழியர்கள் உட்பட குறிப்பிட்ட ஊழியர்கள், குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு நிர்வாக அறிவிப்புகளை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆணையம் தனது விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும். பேருந்தை பாதுகாப்பாக இயக்கும் முக்கியப் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதால், பேருந்து ஓட்டுநர்களுக்கு இத்தகைய அறிவிப்புகளை வழங்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
எனினும், இடையூறு விளைவிக்கும் நடத்தைகளை நிறுத்துமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அதற்குக் கீழ்ப்படியத் தவறினால் பேருந்தைவிட்டு இறங்குமாறு கேட்கவும் ஓட்டுநர்களுக்கு அனுமதி உண்டு.
ஒருவேளை பயணி ஒத்துழைக்க மறுத்தால், பேருந்து ஓட்டுநர் பேருந்து செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் அல்லது காவல்துறையின் உதவியை நாடலாம்.