நவ., 12 முதல் டிச., 11 வரை வாக்காளர் பட்டியல் திருத்தம்
சென்னை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை:
2027 ஜனவரி 1ஐ தகுதி நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. நவம்பர் 2ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றம் சீரமைத்தல் பணி மேற்கொள்ளப்படும்.
நவம்பர் 12ல் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புகார் இருந்தால், டிசம்பர் 11 வரை விண்ணப்பம் செய்யலாம். மனு மீது, டிசம்பர் 28க்குள் தீர்வு காணப்படும்.
இறுதி வாக்காளர் பட்டியல், ஜனவரி 4ல் வெளியிடப்படும்.
பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர், நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி அலுவலர் அலுவலங்களில், அரசு வேலை நாட்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம்கள் நடக்கும் நாட்களிலும் அளிக்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், இருப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றிற்கான சான்று சமர்பிக்க வேண்டும். நேரில் மட்டுமின்றி, https://voterportal.eci.gov.in என்ற இணையதளம், ECINET என்ற மொபைல் போன் செயலி வாயிலாகவும், விண்ணப்பம் செய்யலாம்.
ஜனவரி 1ம் தேதி, ஏப்ரல் 1ம் தேதி, ஜூலை 1ம் தேதி, அக்டோபர் 1ம் தேதிகளில், 18 வயது பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.