நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் கைது ஏன்?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் நந்திகிராம் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டிருப்பது சட்டப்பூர்வ நடவடிக்கையே என்று அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ரெஜிநகர் தொகுதிக்கு முகம்மது அப்துல்லாஹில் கஃபி, நந்திகிராம் தொகுதிக்கு மிலன் பிரதான் ஆகிய வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி கடந்த 11-ம் தேதி அறிவித்தது.
இதனிடையே, நந்திகிராம் தொகுதிக்கான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று மாலை மிலன் பிரதாப் மேற்கு வங்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தின் பூர்வா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள சாந்திபூரில் உள்ள ஒரு ஹோட்டலில், சுபாஷிஷ் பட்டாச்சார்யா என்பவருடன் இருந்தபோது மிலன் பிரதான் கைது செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்துக்காக சுபாஷிஷ் பட்டாச்சார்யாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிலன் பிரதான் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுபங்கர் சர்க்கார், “கொலை வழக்கு ஒன்றுக்காக மிலன் பிரதான் கைது செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும், தெளிவான விவரங்கள் எங்களிடம் இல்லை. நந்திகிராம் போராட்டத்தின் முன்னணியில் இருந்த தலைவர்களில் மிலனும் ஒருவர். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. ஆனால், இப்போது ஏன் அவர் கைது செய்யப்பட்டார்?
பிரதானின் கைதுக்கான காரணத்தை காவல் துறை தெரிவிக்கவில்லை. இது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அந்த தொகுதியின் நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போது காவல் துறை ஒரு வேட்பாளரை எப்படி கைது செய்ய முடியும்?
நந்திகிராமில் மிலன் பிரதான் ஒரு பிரபலமான வேட்பாளர். தேர்தலில் தோல்வியடைவோம் என்று பாஜக அஞ்சுகிறது. அதனால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை இருந்திருந்தால், அவர்கள் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கலாம்.
சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற பிறகும்கூட ஒரு இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவது ஆச்சரியமளிக்கிறது. மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே பாஜக தனது செல்வாக்கை எந்த அளவுக்கு இழந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய மேற்கு வங்க காவல் துறை அதிகாரி ஒருவர், “சாந்திபூரில் உள்ள ஒரு ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான சுபாஷிஷ் பட்டாச்சார்யா உடன் இருந்தபோது மிலன் பிரதான் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டார். பிரதானை கைது செய்வதில் இருந்து காவல் துறையினரை தடுத்த குற்றச்சாட்டின் பேரில் சுபாஷிஷ் பட்டாச்சார்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
மிலன் பிரதான் கைது செய்யப்பட்டிருப்பது சட்டப்பூர்வ நடவடிக்கையே. கலவரம், கொலை, குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளில் 2007-ல் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் தொடர்பாக மிலன் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகளில் மூன்று நந்திகிராம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று கேஜுரி காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுத சட்டத்தின் பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் ஹால்டியாவில் உள்ள கூடுதல் தலைமை நீதித் துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்.” என்று தெரிவித்துள்ளார்.