📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 08, 2026 07:03 AM

 நேபாள பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு

 நேபாள பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 1,355 ஆக உயர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,355 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில், பனிப்பாறை சரிவு காரணமாக, கடந்த ஆக., 26ல் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 1,355 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உடல்களை மீட்டிருப்பதாகவும் நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன 589 வெளிநாட்டினர் உட்பட 4,996 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், அதேவேளையில், இதுவரை 13,396 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில், 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக் ராஜ் பவுடல் 'நேபாளம் அழைக்கிறது' என்ற ஹேஷ்டேக்கில் வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு சமூக வலைதள பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுற்றுலாத்துறை 6.70 சதவீத பங்களிப்பை வழங்குவதோடு, பத்து லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பேரிடர், அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் 26ல் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், உறவினர்களை இழந்து துயருற்ற குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும் நேற்றைய தினத்தை நேபாள அரசு தேசிய துக்க தினமாக அறிவித்தது. நேபாள பாரம்பரியத்தின்படி, மரணம் நிகழ்ந்து 13ம் நாள் செய்யப்படும் இறுதி சடங்குகள் மற்றும் வழிபாடுகளுடன் ஒத்துப் போகும் வகையில் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.