📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 19, 2026 07:32 PM

முடிவுக்கு வருகிறதா கட்டணமில்லா யுபிஐ? ரூ.2,000

முடிவுக்கு வருகிறதா கட்டணமில்லா யுபிஐ? ரூ.2,000

ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரிய அளவிலான டிஜிட்டல் வணிகப் பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டண நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறையில் இருந்த ‘ஜீரோ MDR’ எனப்படும் வணிகர் பரிவர்த்தனை கட்டணமில்லா முறை இதன் மூலம் முடிவுக்கு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த முறை, வங்கிகள் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நீடிக்க முடியாததாக இருப்பதாக நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

ரூ.1 லட்சம் வரை மாத வருமானம் பெறும் சிறு வணிகர்கள் UPI QR குறியீடு மூலம் பெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 96 சதவீத வணிகப் பரிவர்த்தனைகள் புதிய கட்டணத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ரூ.2,000 வரையிலான நபர்-வணிகர் (Person-to-Merchant) UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் விதிக்கப்படாது. ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் ரூ.300-க்கு மேல் இருக்காது.

ரயில்வே, தொலைத்தொடர்பு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 என்ற நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூலதனச் சந்தை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 0.02 சதவீதம் என்ற குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

UPI மூலம் நபருக்கு நபர் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. UPI-யின் மொத்த பரிவர்த்தனை எண்ணிக்கையில் 37 சதவீதமும், பரிவர்த்தனை மதிப்பில் 70 சதவீதமும் நபருக்கு நபர் பணப்பரிமாற்றங்களாக உள்ளன. எனவே, பொதுமக்கள் UPI மூலம் தொடர்ந்து இலவசமாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

புதிய கட்டணத்தின் மீது கூடுதல் ‘பிளாட்ஃபார்ம் கட்டணம்’ விதிக்க செயலி வழங்குநர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், MDR கட்டணச் செலவை வாடிக்கையாளர்களிடம் வணிகர்கள் வசூலிக்காத வகையில் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக வசூலிக்கப்படும் MDR தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, சிறு வணிகர்களிடையே UPI பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.