மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்
மதுரை, அக். 5–மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ‘அவர்லேண்ட்’ நிறுவனத்தை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிகாரிகளுக்கும் தூய்மைப் பணியாளர் சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, இன்று முதல் மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 4,800 மனுக்களை மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமாரிடம் வழங்கி, அக்டோபர் 5 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், வி.சி.க.வின் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யூ. ஆகிய சங்கங்களின் நிர்வாகிகளுடன் மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.வெளியேற்ற வேண்டும்:அப்போது சங்கப் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்துத் தெரிவிக்கையில், “அவர்லேண்ட் நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்; அதற்காக தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி, தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த முறையில் 2 ஆண்டுகள் பணி செய்தவர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் பாதாளச் சாக்கடை சீரமைப்புத் திட்டத்தில் தனியார் பங்களிப்பை அரசு கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் தரப்பில், “நவம்பர் 15 ஆம் தேதி ஒப்பந்த முடிவுக்குப் பின் ‘அவர்லேண்ட்’ நிறுவனம் தானாகவே வெளியேறிவிடும். மேலும், அரசாணை ரத்து மற்றும் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகள் குறித்து மாநில அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.சுமூக உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், அம்சராஜ் மற்றும் போஸ் ஆகியோர் அறிவித்தனர்.அதன்படி, இன்று காலை மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்துடன் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.