மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த 11
மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த 11-ஆம் வகுப்பு மாணவன்: 17 நாட்களுக்கு பிறகு உடல் ஒப்படைப்பு
இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும்; விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மாணவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Published : September 22, 2026 at 5:30 PM IST
மதுரை: மதுரை ஆனையூர் பகுதியில் மாயமான 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வனின் உடல், 17 நாட்களுக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் இன்று (செப்.22) ஒப்படைக்கப்பட்டது.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். 11-ஆம் வகுப்பு மாணவரான இவர், கடந்த 6-ஆம் தேதி வெளியே விளையாட சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை.
மறுநாள் (செப்.7), அப்பகுதியில் உள்ள முட்புதர் சூழ்ந்த குட்டையில் இருந்து மாணவர் தமிழ்ச்செல்வன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரது உறவினர்கள், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும்; விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும்; சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உடலை வாங்க மறுத்து வந்தனர்.
இதையடுத்து, ‘தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டமைப்பு’ சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முற்றுகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, உண்ணாவிரதப் போராட்டம் என 16 நாட்களாக மாணவரின் உறவினர்களும், ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
17-வது நாளான இன்று, குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவனின் உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல் துறையினரிடம் கடிதமும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வனின் உடல், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல் துறையினர் மூலம் ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்றுக்கொண்ட தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டமைப்பினர், அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வைகை ஆறு தரைப்பாலம் வரை ஊர்வலமாக சென்று மாணவனுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், தமிழ்ச்செல்வனின் உடல், அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் குஜ்ஜிலியம்பாறை அருகே உள்ள பாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் நீதிக்கான கூட்டமைப்பை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவல்துறை விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உயர்நீதிமன்றம் நிச்சயம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. குடும்பத்தினரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தற்போது மாணவனின் உடலைப் பெற்றுக்கொண்டோம்.
உடலை பெற்றுக்கொண்டாலும், எங்களது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு, குற்றவாளிகளை கைது செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும். மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது எங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மாணவனின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கின் விசாரணை நிலை, உடற்கூராய்வு மற்றும் தடயவியல் பரிசோதனை முடிவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பு தெரிவித்துள்ளது.