மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வு ஏற்கெனவே நிறைவடைந்து விட்டதால், இந்த மனுவைத் தொடர்ந்து விசாரிக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Published : September 28, 2026 at 5:34 PM IST
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்கனவே நிறைவடைந்து விட்டதால், வேள்வி குண்டங்களில் தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்கக் கோரிய மனுவை தொடர்ந்து விசாரிக்க இயலாது எனக் கூறி மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது.
கோவையைச் சேர்ந்த சுரேஷ் பாபு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா, குடமுழுக்கிற்கு முன், இடை மற்றும் மண்டல பூஜையின் போது தமிழ் வேள்வி ஆசிரியராக வேள்வி குண்ட நிகழ்வுகளை நடத்த சம வாய்ப்பு வழங்குமாறு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்.
அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். என் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கோயிலில் தகுதியான ஸ்தானிக பட்டர்கள் மற்றும் ஓதுவார்கள் உள்ளனர். குடமுழுக்கு விழாவின்போது வேள்விகள் முன்பும், பின்பும் நடத்தப்பட்டது போல இத்தகுதியான நபர்களாலேயே நடத்தப்படும் என்று கூறி என் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன். அதில், திருக்குடமுழுக்கு வேள்வி நிகழ்வுகளின் முழு காலத்திலும் சமஸ்கிருத யாக குண்டங்களுக்கு இணையாகச் சம எண்ணிக்கையிலான வேள்வி குண்டங்களில் தமிழ் வேள்வி நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். அந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற அமர்வு, கோயில்களில் தமிழ் மந்திரங்கள் ஓதுவதற்கு ஆகமங்களிலோ சமய நூல்களிலோ எந்தத் தடையும் இல்லை என தீர்ப்பளித்ததை நீதிபதி கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ், சந்திரா அமர்வு, "மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால், இந்த மனுவைத் தொடர்ந்து விசாரிக்க இயலாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேசமயம் மனுதாரரின் கோரிக்கை முக்கியத்துவமானது என்பதால், மனுதாரர் புதிதாக மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.