மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கவனிக்க வேண்டிய 12 சிறப்பம்சங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் கவனிக்க வேண்டிய 12 சிறப்பம்சங்கள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இம்முறை பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் முன்பதிவு நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேசமயம் கோயில் வளாகத்திற்கு வெளியே எல்இடி திரைகள் மூலம் நிகழ்வை காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Published : September 13, 2026 at 8:49 PM IST
-BY இரா.சிவக்குமார்
மதுரை: ஒட்டுமொத்த பக்தர்களின் எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் 17-ம் தேதி (செப்.17) நடைபெற உள்ளது. இப்பெருவிழாவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், விழாவின் 12 முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இச்செய்தி கட்டுரை.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் செப்டம்பர் 17 அன்று நடைபெற உள்ளது. 2009-க்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகம், வழக்கமான ஆன்மிக நிகழ்வைத் தாண்டி, கோயில் கட்டிடப் பாதுகாப்பு, பாரம்பரியக் கட்டிடக்கலை, திருப்பணிகள், பக்தர்கள் பங்கேற்பு என பல்வேறு கோணங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பொதுவாக குறிப்பிட்ட கால இடைவெளியில் திருக்குடமுழுக்கு நடத்தப்பட வேண்டிய நிலையில், 2018-ல் ஏற்பட்ட வீர வசந்தராயர் மண்டப தீ விபத்து உள்ளிட்ட காரணங்களால், இக்கோயில் திருப்பணிகள் நீண்ட காலம் நடைபெற்றன. இதனால் 2021-ல் நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் தாமதமானது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பட்டணம் கிராமமும் வீர வசந்தராயர் மண்டபமும்
2018 பிப்ரவரி 2இல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வீர வசந்தராயர் மண்டபம் கடுமையாக சேதமடைந்தது. அதன் பின்னர் பாரம்பரிய கட்டிடக்கலையின் தன்மை மாறாமல் மண்டபத்தை மீட்டெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மண்டபத்திற்கு ஏற்ற தூண்களை உருவாக்குவதற்கான கற்கள் கிடைக்கும் இடம் மிகப்பெரிய சவாலாக இருந்த நிலையில், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமம் தான் இதற்கு ஒரு வழியை தந்தது என்பது முக்கியமானது.
மன்னர் காலத்திற்குப் பிறகு மக்களாட்சி காலத்தில் கலை நயம் மாறாமல் சுமார் 38 கோடி ரூபாய் செலவில் இந்த மண்டபம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. கருங்கல் தூண்கள் உள்ளிட்ட கட்டுமானப் பகுதிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, மண்டபம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக கோயில் திருகுடமுழுக்கிற்கு முன்பாக இந்த மண்டபம் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
186 திருப்பணிகள்
14 கோபுரங்கள், தங்க விமானங்களுக்கு ஒரே நாளில் குடமுழுக்கு
மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கோபுரங்கள் மற்றும் முக்கிய விமானங்கள் கும்பாபிஷேகத்தின் மையப்பகுதியாக உள்ளன. செப்டம்பர் 17 காலை, முதலில் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் சன்னதிகளுக்கு தனித்தனி முகூர்த்தங்கள் உள்ளன. காலை 7.40, 7.55, 8.10 என மூன்று முக்கிய நேரங்களில் குடமுழுக்கு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
தங்க விமானங்களுக்கு சிறப்பு மெருகூட்டல்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளின் தங்க விமானங்கள் சிறப்பு முறையில் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. பாரம்பரிய முறையில் புளித்தண்ணீர், பூந்திக்கொட்டை கரைசல் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்க மேற்பரப்புகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் தங்கக் கொடிமரங்களுக்கும் மெருகூட்டும் பணிகள் நடைபெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தையொட்டி கோயிலின் முக்கிய தங்கக் கட்டமைப்புகளுக்கு வழங்கப்படும் இந்தப் பராமரிப்பு தனிச்சிறப்பு பெறுகிறது.
வைகை-கங்கையுடன் இணையும் கும்பாபிஷேக சடங்குகள்
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக சடங்குகளில் மதுரையின் அடையாளமான வைகை ஆறும் இணைக்கப்படுகிறது. விழா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வைகை ஆற்றில் தீர்த்தம் எடுத்தல், புனித மண் எடுத்தல் உள்ளிட்ட சடங்குகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கங்கை நீரும் கோயிலை வந்தடைந்துள்ளது. இதனால் மதுரையின் உள்ளூர் புனித நீராதாரமான வைகையும், இந்தியாவின் முக்கிய புனித நதியான கங்கையும் கும்பாபிஷேக சடங்குகளுடன் குறியீட்டு ரீதியாக இணைகின்றன.
பல கட்ட யாகசாலை வேள்விகள்
கும்பாபிஷேகம் ஒரே நாளில் நடைபெறும் நிகழ்வு மட்டுமல்ல. அதற்கு முன்பாக பல்வேறு சடங்குகள் மற்றும் யாகசாலை வேள்விகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 8 முதல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி, தீர்த்தம் மற்றும் மண் எடுத்தல் உள்ளிட்ட சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. யாகசாலையில் நடைபெறும் வேள்விகளின் மூலம் புனிதப்படுத்தப்பட்ட நீர், இறுதியாக கோபுரங்கள் மற்றும் விமானங்களில் உள்ள கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
தமிழில் வேத மந்திரங்கள் – தனித்துவமான ஆன்மிக முன்னெடுப்பு
இந்த கும்பாபிஷேகத்தில் தமிழில் வேத மந்திரங்களை ஓதும் நடைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமஸ்கிருத மந்திரங்களுடன் தமிழ் வழிபாட்டு மரபுக்கும் உரிய இடம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சைவ சமயத்தின் தமிழ் பக்தி மரபு, தேவாரம் உள்ளிட்ட தமிழ் திருமுறை மரபுகளுக்கும் கும்பாபிஷேக நிகழ்வுகளில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வழிபாட்டு மரபையும், ஆகம நடைமுறைகளையும் இணைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
ஓதுவார்களுக்கு உரிய முக்கியத்துவம்
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஓதுவார்களின் பங்களிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைப் பாடல்களை தலைமுறைகளாகப் பாடி வரும் ஓதுவார்கள், தமிழ் சைவ வழிபாட்டு மரபின் முக்கியமான இணைப்பாக உள்ளனர். கும்பாபிஷேக நிகழ்வுகளில் அவர்களின் பங்கேற்பு, கோயிலின் பழமையான தமிழ் சைவ மரபை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது வெறும் சடங்கு நிகழ்வாக இல்லாமல், தமிழ் திருமுறை மரபின் தொடர்ச்சியைப் பதிவு செய்யும் நிகழ்வாகவும் அமைகிறது.
ஒளிரும் கோயில் கட்டிடக் கலை
இந்த கும்பாபிஷேகம் வழிபாட்டு நிகழ்வாக மட்டுமின்றி, மதுரையின் பல நூற்றாண்டு கால கட்டிடக்கலைப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளில் மராமத்து மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக தீ விபத்துக்குள்ளான வீர வசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் மீட்டெடுத்துள்ளது பாரம்பரியக் கட்டிடப் பாதுகாப்பின் முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்களுக்கான மிகப்பெரிய ஏற்பாடுகள்
கும்பாபிஷேகத்தையொட்டி மதுரைக்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்கள் பார்வையிடும் வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளன. கோயில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, வெளிப்புறங்களில் எல்இடி திரைகள் மூலம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது இந்த விழாவின் மிகப்பெரிய நிர்வாகச் சவால்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.
கும்பாபிஷேகத்தை நேரில் காண்பதிலும் புதிய நடைமுறைகள்
இம்முறை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேரடியாக கோயிலுக்குள் செல்வதிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் முன்பதிவு நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேசமயம் கோயில் வளாகத்திற்கு வெளியே எல்இடி திரைகள் மூலம் நிகழ்வை காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், உணவு மற்றும் அன்னதானத்திற்கான சுகாதார விதிமுறைகள் என கும்பாபிஷேகத்தை ஒரு மிகப்பெரிய பொதுமக்கள் நிகழ்வாக நிர்வகிக்கும் வகையில் கோயில் நிர்வாக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.