மதுராந்தகம் கிறிஸ்தவ ஆலயங்களில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு வாக்கு சேகரிப்பு: இனிகோ இருதயராஜ் பிரசாரம்
மதுராந்தகம் கிறிஸ்தவ ஆலயங்களில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு வாக்கு சேகரிப்பு: இனிகோ இருதயராஜ் பிரசாரம்
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் உள்ள 24 வார்டுகளிலும் இன்று காலை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில், திமுக வேட்பாளர் இ.பரந்தாமனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. முன்னதாக, மதுராந்தகம் அண்ணா சிலை அருகில் இருந்து திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்காளர்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, வன்னியர்பேட்டைக்கு சென்ற திமுக வேட்பாளர் இ.பரந்தாமனுக்கு, அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து, மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், அப்பகுதி வாக்காளர்களிடையே கடந்த திமுக ஆட்சியின் சாதனைகளை திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் பட்டியலிட்டார். மேலும், தற்போதைய தவெக அரசின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு குறித்து வாக்காளர்கள் மத்தியில் விரிவாக பேசினார். இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் மண்டபம் தெருவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை ஏராளமான கிறிஸ்தவர்கள் ஜெபத்தில் ஈடுபட்டு வெளியே வந்தனர்.
அம்மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை வெற்றி பெறவைத்து சட்டமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் உள்பட காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், முன்னால் எம்எல்ஏக்கள் எழிலரசன், கருணாநிதி ஆகியோர் கிறிஸ்தவ மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும், காந்தி நகரில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயத்தில் ஜெபத்தில் ஈடுபட்டு வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் இனிகோ இருதயராஜ் உள்பட திமுக நிர்வாகிகள், திமுக வேட்பாளர் இ.பரந்தாமனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மதுராந்தகம் நகர செயலாளர் குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், மாநகர செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் குமார், பாபு, சேகர், குமணன், பகுதி செயலாளர்கள் திலகர், சந்துரு, வெங்கடேசன், தசரதன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஆண்டோ சிரில்ராஜ் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.