📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 19, 2026 01:33 PM

மிரட்டும் மின்வெட்டு... தவிக்கும் தமிழகம்!

மிரட்டும் மின்வெட்டு... தவிக்கும் தமிழகம்!

மிரட்டும் மின்வெட்டு... தவிக்கும் தமிழகம்!

தேனி மாவட்டம், போடி சட்டமன்றத் தொகுதியிலுள்ள உப்பார்பட்டி, பாலார்பட்டி போன்ற கிராமங்களில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை நீடிப்பதால், தங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று போராட்டங்களில் குதித்திருக்கின்றனர், அந்தப் பகுதி விவசாயிகள்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த மூன்று மாதங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுப் பிரச்னை, ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் போராட்டக் களமாக மாற்றியிருக்கிறது. இரண்டு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும் மின்வெட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைச் சிதைத்துப்போட்டிருக்கிறது.

சென்னையில் மாலை வரை நீடிக்கும் மின்வெட்டு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தலைநகர் சென்னையில் லேசாகத் தலைதூக்கிய மின்வெட்டுப் பிரச்னை, தற்போது தமிழகம் முழுவதும் தாண்டவமாடிவருகிறது. இயல்பைத் தாண்டி நீடிக்கும் கோடை வெப்பத்தைச் சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள், இரவில் ஏற்படும் மின்வெட்டால் நிதானத்தை இழந்து தீப்பந்தங்களுடன் மின் அலுவலகங்களை முற்றுகையிட்டுவருகின்றனர். சென்னை நகர்ப்பகுதி மட்டுமன்றி, பெருநகரத்துடன் இணைக்கப்பட்ட பெருங்களத்தூர், முடிச்சூர், குன்றத்தூர், சேலையூர், தாம்பரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணிக்கு நிறுத்தப்படும் மின்சாரம், பல நேரங்களில் மாலை 5 மணி வரை நீடிக்கிறது.

அதேபோல அடையாறு, கோடம்பாக்கம், வடசென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைதான். வேலூரில் அமைச்சர் செங்கோட்டையனும், கும்மிடிப்பூண்டியில் சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகமும், திருச்செந்தூரில் வி.சி.க தலைவர் திருமாவளவனும் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்சாரம் துண்டிக்கப்பட்டது போன்றவை, தமிழகம் முழுவதும் நிலவிவரும் மின்வெட்டுப் பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ-வும், இந்நாள் த.வெ.க நிர்வாகியுமான இசக்கி சுப்பையா விரட்டியடிக்கப்பட்ட சம்பவம், மின்வெட்டுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்களின் கிளர்ச்சி.

மதுரையைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 15 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படுவதாகக் குமுறுகின்றனர் அந்தப் பகுதி மக்கள். குறிப்பாக, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, எஸ்.எஸ்.காலனி, மேலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் இரண்டிலிருந்து ஐந்து மணி நேரம் வரை மின்சாரத்தை நிறுத்திவிடுவதால், `நாளெல்லாம் உழைத்துக் களைத்துத் திரும்பும் எங்களால் கொஞ்ச நேரம்கூடத் தூங்க முடியவில்லை’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.

சாலை மறியல், எம்.எல்.ஏ முற்றுகை... மின் அலுவலகங்களுக்கு அஞ்சலி!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்திலுள்ள அம்மாபேட்டை, வடக்கு அரியாவூர் பகுதிகளில் தினமும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து, தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் சாலை மறியலில் அமர்ந்துவிட்டனர்.

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை தாலுகா பகுதிகளிலுள்ள 80% கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக மின்வெட்டு செய்யப்படுகிறது. அதில் கடுப்பான மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி த.வெ.கஎம்.எல்.ஏ சத்தியாவைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி கேட்க, `தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று அங்கிருந்து நகர்ந்தார் எம்.எல்.ஏ.

முடங்கியத் தொழில் நிறுவனங்கள்!

சேலம் மாவட்ட மக்களின் முக்கியத் தொழில் விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்கள்தான். ஆனால் இந்தத் தொடர் மின்வெட்டால் உற்பத்தி தடைப்படுவதுடன், ஆர்டர்களையும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியவில்லை. அதனால் ஏற்படும் நஷ்டத்தை எப்படி ஈடுசெய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் நெசவாளர்கள்.

மேலும், லேத் வொர்க்ஸ், மாவு மில்கள், வெல்டிங் கடைகள் போன்ற மின்சாரத்தை மட்டுமே நம்பியிருக்கும் சிறு தொழில்கள் பகல் நேர மின்வெட்டால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றன. அதேபோல, சேலம் மாவட்டத்தின் ஏற்காடு, வாழப்பாடி போன்ற பகுதிகளில் ஏற்படும் தொடர் மின்வெட்டால், அந்தப் பகுதியின் துணைமின் நிலையங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் நகர், புறநகர், கிராமம் எனப் பாரபட்சமின்றி தினமும் பலமுறை ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சத்தியமங்கலம் முதல் வெள்ளித்திருப்பூர் வரை தொடரும் மின்வெட்டால் விசைத்தறி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதுடன், இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படுவதால் மக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால், மின்வெட்டைக் கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் மின்வெட்டு, ஓசூர் பகுதியில் செயல்பட்டு வரும் குறு, சிறு தொழில் நிறுவனங்களை மொத்தமாக முடக்கிப்போட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் பெரிய அளவில் மின்வெட்டு பிரச்னை இல்லை என்றாலும், தொழில் நகரமான கோவில்பட்டியில் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது. அதனால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

என்ன சொல்கிறார் அமைச்சர்?

இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம் கேட்டபோது, ``தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லை என்பதுதான் உண்மை. அனைத்தையும் சரிசெய்துவிட்டோம். ஒரு சில பகுதிகளில் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாவதால் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். அதேசமயம், கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தில் மட்டுமல்ல... பிற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு, காற்றாலையில் மின் உற்பத்தி குறைந்ததுதான் காரணம்.

செப்டம்பர் மாதம் காற்றின் வேகம் குறையும் என்பதால், காற்றாலை மூலம் பெறப்படும் மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு, இதே மாதம் 16,000 மெகாவாட்டாக இருந்த தமிழகத்தின் மின் தேவை, தற்போது 19,000 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. கடந்த முறை பொதுத் தொகுப்பில் 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. இந்த முறை கூடுதலாக 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால் விரைவில் இந்தத் தற்காலிக மின் தட்டுப்பாடு முடிவுக்கு வரும்” என்றார்.