📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 13, 2026 10:03 AM

மின் கொள்முதல் விலையை கேட்டாலே ஷாக்; இதுவரை இல்லாத அளவாக யூனிட் விலை ரூ.37!

மின் கொள்முதல் விலையை கேட்டாலே ஷாக்; இதுவரை இல்லாத அளவாக யூனிட் விலை ரூ.37!

சென்னை: தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, நேற்று முதல் ஒரு யூனிட் மின்சாரத்தை, 37 ரூபாய்க்கு வாங்க, மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. வரலாற்றில் இவ்வளவு விலைக்கு மின்சாரம் வாங்குவது, இதுவே முதல்முறை.

தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரிய சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் வாங்கப்படுகிறது.

அதன்படி, நேற்று முதல், வரும் 31ம் தேதி வரை, தினசரி 24 மணி நேரமும், 1,500 மெகாவாட்; மாலை, 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம் கடந்த வாரம், 'டெண்டர்' கோரியது. அதன் அடிப்படையில், தற்போது, 24 மணி நேரமும் வாங்கப்பட உள்ள மின்சாரத்தை, யூனிட் 31.99 ரூபாய் முதல், 34.49 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்வதற்கு, ஐந்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மாலை முதல் நள்ளிரவு வரை, 3,000 மெகாவாட் மின்சாரம் வாங்க டெண்டர் கோரியதில், 2,001 மெகாவாட் கிடைத்துள்ளது. இந்த மின்சாரம் யூனிட், 33.37 ரூபாய் முதல், 37 ரூபாய் வரை வாங்கப்பட உள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது இதுவே முதல்முறை.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலக்கரிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மின் கொள்முதல் டெண்டரில், அனல் மின்சாரம் கிடைக்கவில்லை. எரிவாயு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அனல் மின்சாரத்தின் விலை யூனிட் சராசரியாக, 10 ரூபாய்க்கு கிடைத்தால் கூட, அதில் நிலையான செலவு, மாறும் செலவு சராசரியாக, தலா, 50 சசதவீதம் இருக்கும். மின்சாரம் வாங்கினால், முழுத் தொகையும் செலுத்த வேண்டும். இல்லையெனில், நிலையான செலவு எவ்வளவோ, அதை முழுதுமாக செலுத்த வேண்டும்.

அதேசமயம், எரிவாயு மின் நிலையங்களில், மின்சாரம் வாங்கவில்லை எனில், நிலையான செலவாக யூனிட்டிற்கு, 1 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். தற்போது, மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ள மின்சாரத்தின் விலை அதிகம் இருப்பதால், அவசியம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.