மீண்டும் தொடங்கிய ஈரான்
மீண்டும் தொடங்கிய ஈரான் - இஸ்ரேல் போர்... சாம்பலாகப் போகும் உலகப் பொருளாதாரம்!
போர் நிறுத்தப்பட்ட பின்னரும், அமைதி ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.
’அமைதி திரும்ப வேண்டும்’ என்ற எண்ணத்தோடு இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை உலக நாடுகள் பலவும் உற்றுநோக்கி வந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் வெடிகுண்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
பிப்ரவரி 28, 2026 அன்று, அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலைத் தாக்க, போர் மூண்டது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்திருக்கும் மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது ஈரான். சுமார் 40 நாள்கள் நடந்த இந்தப் போர், இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின்படி ஏப்ரல் 8-ம் தேதி நிறுத்தப்பட்டது.
கடந்த சில நாள்களாகவே தெற்கு லெபனான் பகுதியில் தீவிரத் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருந்த இஸ்ரேல், ஈரானின் எச்சரிக்கையையும் மீறி, லெபனான் நாட்டின் சில எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்தது. அந்தப் பகுதிகளில், தங்கள் ராணுவத்தைக் களமிறக்கி, முழுக் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வந்தது இஸ்ரேல். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது ஏவுகணைகளை வீசியிருக்கிறது. பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வரவில்லை. அதிலிருந்து 100-வது நாளான ஜூன் 7-ம் தேதி மீண்டும் தொடங்கியிருக்கிறது.
ஜூன் 7-ம் தேதி, இஸ்ரேலை ஈரான் மீண்டும் தாக்கியவுடன், ``ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தினால், அது பேச்சுவார்த்தைகளைப் படுகுழியில் தள்ளிவிடும். எனவே, ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கக் கூடாது’’ என வலியுறுத்தினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதை மீறித்தான் ஈரானைத் தாக்க உத்தரவிட்டிருக்கிறார் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு. இரு தரப்பும் இடைவிடாமல் தாக்கிக்கொள்வதைப் பார்க்கும்போது, இது மீண்டுமொரு நெடிய போராக மாறும் அபாயம் தென்படுகிறது. இந்தப் போர் மேலும் தொடர்ந்தால், ஏற்கெனவே ஆட்டம் கண்டிருக்கும் உலகப் பொருளாதாரம் படுபாதாளத்துக்குச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இஸ்ரேலின் தாக்குதலைக் காரணம் காட்டி, உலக வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணைப் பகுதியைத் திறக்க மறுக்கிறது ஈரான். இடைக்கால அமைதி ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர் சீனா, பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு சில கப்பல்களை மட்டுமாவது அனுமதித்து வந்தது ஈரான். தற்போது மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி யிருப்பதால், ஓரிரு கப்பல்கள்கூட ஹார்முஸ் நீரிணையைத் தாண்ட முடியாத சூழல் உருவாக்கியிருக்கிறது. எரிபொருள் தேவைக்கு 80% வெளிநாடுகளையே நம்பியிருக்கும் இந்தியாவுக்கு இது நற்செய்தி அல்ல. ஏற்கெனவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையுயர்வால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் எகிறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், ``இது பேரிடர்களின் தசாப்தம். முன்னதாக கொரோனா, அடுத்ததாகப் போர்கள். தற்போது போர்களின் விளைவாக மிகத் தீவிரமான எரிசக்தி நெருக்கடியை உலகம் எதிர்கொண்டுவருகிறது. எரிபொருள் வர்த்தகச் சங்கிலி சீர்குலைந்துகொண்டிருக்கிறது. 140 கோடி மக்களின் ஒன்றிணைந்த உழைப்பால் இந்தச் சவாலை இந்தியா சமாளித்துக்கொண்டிருக்கிறது’’ என்று கடந்த வாரம் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்தப் போரின் விளைவாக இந்தியா எதிர்கொள்ளப் போகும் பொருளாதாரச் சங்கடங்களின் முன்னோட்டமாகவே பிரதமர் எச்சரிக்கை மணி அடிக்கும் தொனியில் பேசியிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
அவர்கள் மேலும் கூறும்போது, ``இஸ்ரேல் - ஈரான் மோதல் உடனடியாக நிறுத்தப்படவில்லையென்றால், இந்தியாவில் எரிபொருள் விலை தாறுமாறாக உயருவதைத் தடுக்க முடியாது. ஒருகட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பும், பொருளாதாரமும் ஆட்டம் காணலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை ஏற்படுத்தும்’’ என்றும் சொல்கிறார்கள்.
சில நாடுகளின் அதிகாரப் பசிக்காக உலக நாடுகள் பலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிலும், விலைவாசி உயர்விலும் சிக்கித்தவிப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல. எனவே, இனியாவது அமெரிக்காவும் ஐ.நா சபையும் வெறும் அறிக்கைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரை உடனடியாக நிறுத்தத் தீவிரமான தூதரக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லையென்றால், இந்தப் போர் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் நெருப்பில் தள்ளி, சாம்பலாக்கிவிடும்!