மீனாட்சி அம்மன் கோவிலில் விஜய் அண்ட் பேமிலி பெயரில் அர்ச்சனை செய்த முதல்வர்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், செப்., 28ல் தரிசனம் செய்த முதல்வர் விஜய், தன் பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் அர்ச்சனை செய்ததோடு, 'அம்மன் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு' என்று கூறி, அம்மனின் அவதாரம் குறித்து ஆர்வமாக கேட்டறிந்துள்ளார்.
தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை துவக்கி வைக்க, செப்., 28ல் மதுரை வந்த முதல்வர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலில் அரைமணி நேரம் தரிசனம் செய்தார். அவர் கோவிலுக்குள் வழிபட்ட படங்கள், வீடியோக்களை வெளியிடக்கூடாது என, அமைச்சர் ரமேஷ் 'கறாராக' கூறியதால், இதுவரை அறநிலையத்துறை தரப்பிலும், செய்தி விளம்பரத்துறை தரப்பிலும் வெளியிடப்படவில்லை.
அதே சமயம், கட்சிக்காரர்கள் சிலர் முக்குறுணி விநாயகர் சன்னிதி பகுதியில் விஜய் நடந்து வருவதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். கோவிலுக்கு வந்த முதல்வர் விஜயிடம், கோவில் சிறப்புகள் குறித்து சிவாச்சாரியார்கள் கூறினர்.
அவர்களிடம், 'அம்மன் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. இப்போது தான் முதல் முறை வருகிறேன்' என்று கூறி, அம்மன் ஏன் மானிடராக அவதரித்தார் போன்ற விபரங்களை ஆர்வமுடன் கேட்டவாறே, பொற்றாமரைக்குளத்தை கடந்து, அம்மன் சன்னிதிக்கு சென்றார்.
ஏற்கனவே அவரது நட்சத்திரம் பூசம், ராசி கடகம் என்று சிவாச்சாரியார்கள் அறிந்து வைத்திருந்ததால், 'யார் பேருக்கு அர்ச்சனை' எனக் கேட்க, 'விஜய் அண்ட் பேமிலி' என்று முதல்வர் கூற, அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர், சுவாமி சன்னிதிக்கு சென்றுவிட்டு, கொடிமரம் முன் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கி விட்டு புறப்பட்டு சென்றார்.
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கருக்கும், கடக ராசி, பூசம் நட்சத்திரம். அதனால் தான் தைப்பூசத்தன்று மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார்.
'அதே ராசியும், நட்சத்திரமும் கொண்ட முதல்வர் விஜய், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு மாநிலத்தின் தலைவராக வந்தது, மன்னரே வந்ததற்கு சமம்' என, பக்தர்களும், த.வெ.க.,வினரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.