மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தவெக அரசு அணுவளவும் அனுமதியளிக்க கூடாது!
புதிய அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மை யான கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.
ஆணவத்தின் உச்சம்
இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு பாலைவனமாகும்
காவிரி கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமான நதி இல்லை. அது தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்த வாழ்வாதார உரிமை! காவிரியின் கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் நீருரிமையையும், லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தையும் புறந்தள்ளிவிட்டு கர்நாடகம் தன்னிச்சையாக புதிய அணையைக் கட்ட முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உரிமையை இழந்த பிறகு போராடி என்ன பயன்?
கர்நாடக முதல்-மந்திரி மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அனுமதி கோருகிறார்; தமிழ்நாடு முதல்-அமைச்சர் காவிரி உரிமையைக் காக்க மத்திய அரசிடம் என்ன அரசியல் மற்றும் சட்ட அழுத்தத்தை உருவாக்கியுள்ளார்?
மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வெறும் கோரிக்கை வைத்து வழக்கம்போல் கடிதம் எழுதுவதோடு முதல்-அமைச்சர் விஜய் கடமையை முடித்துக்கொள்வாரா?
கர்நாடக அரசு தனது மாநிலத்தின் நலனுக்காகத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் நலனுக்காக அதே உறுதியையும் வேகத்தையும் தவெக அரசு காட்ட வேண்டாமா?
அனுமதியை பெற விடக்கூடாது
மேகதாது என்பது வெறும் ஓர் அணை சிக்கல் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் நீருரிமை, உணவு உற்பத்தி, டெல்டா உழவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய மிக முக்கியமான உரிமைப் பிரச்சினையாகும்.
எக்காரணம் கொண்டும், எத்தகைய அழுத்தம் வந்தாலும், தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதிக்கும் மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய மத்திய அரசின் அனுமதியை பெறவும் விடக்கூடாது.
எனவே, கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மேலும் உறுதியாக்கி, மத்திய அரசு எந்தவிதமான அனுமதியையும் வழங்காமல் தடுப்பதற்குத் தேவையான சட்ட, நிர்வாக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.