லித்தியம் மறுசுழற்சி: சிங்கப்பூர் நிறுவனத்தின் புதிய முயற்சி
மின்சார வாகனங்களின் குறிப்பிட்ட சில வகை மின்கலன்களிலிருந்து லித்தியம் உலோகத்தை மீட்டெடுக்கும் நடைமுறையை வர்த்தக ரீதியாகச் சாத்தியமாக்கும் நோக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த புதிய நிறுவனம் ஒன்று தனது முதல் ஆலையைத் தொடங்கியுள்ளது.
என்.இ.யு. பேட்டரி மெட்டீரியல்ஸ் நிறுவனம், துவாஸ் பகுதியில் 12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புதிய ஆலையின் திறப்பு விழாவைச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடத்தியது.
இந்த ஆலை ஆண்டுக்கு 1,300 டன் மின்கலன் கழிவுப்பொருள்களைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. அத்துடன், இந்நிறுவனம் தனது நிதி திரட்டலின்போது எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக 7.6 மில்லியன் அமெரிக்க டாலரை (S$9.7 மில்லியன்) வெற்றிகரமாகத் திரட்டியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிதியானது ஆலையின் செயல்பாடுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள வெளிநாட்டு விரிவாக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று சிஎன்ஏ செய்தி நிறுவனத்திடம் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான பிரையன் ஓ தெரிவித்தார்.
இந்நிறுவனம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைத் தனது அடுத்தகட்ட இலக்காகக் கொண்டு, அங்குள்ள மின்கலத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பெரிய அளவிலான ஆலைகளை அமைக்க விரும்புகிறது.
இருப்பினும், சிங்கப்பூர் ஆலையை உடனடியாக முழுத் திறனில் இயக்கத் திட்டமிடவில்லை என்று திரு பிரையன் ஓ கூறினார்.
என்.இ.யு. நிறுவனம், லித்தியம் அயன் பாஸ்பேட் மின்கலப் பொருள்களிலிருந்து லித்தியத்தை மீட்டெடுப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளது. நிக்கல் மாங்கனீஸ் கோபால்ட் மின்கலன்களுக்கு மாற்றாக இந்த வகை மின்கலன்கள் மின்சார வாகனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்துலக எரிசக்தி முகமையின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் உலகளவில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகன மின்கலன்களில் லித்தியம் அயன் பாஸ்பேட் மின்கலன்கள் 55 விழுக்காட்டுக்கும் அதிகமாகும். இது அதற்கு முந்தைய ஆண்டில் ஏறத்தாழ 50 விழுக்காடாக இருந்தது.