குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலையாமலை ஊராட்சியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தலையாமலை ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், தலையாமலை பகுதியிலிருந்து சுமார் 3 முதல் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழவித்தியாபுரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் மூலமாகவும் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, தங்களது குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், தாங்கள் தொலைதூரப் பகுதிகளில் இருந்து குடிநீர் எடுத்து வரும் நிலையை அதிகாரிகளிடம் எடுத்துக்காட்டி, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சப்தியம்மாள் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கீழையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றபோதும், தங்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தலையாமலை பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.