கடைசி அம்பு வரை உச்சக்கட்ட த்ரில்லர்.. சீனாவை மிரட்டி வெள்ளி வென்ற தீரஜ்
கடைசி அம்பு வரை உச்சக்கட்ட த்ரில்லர்.. சீனாவை மிரட்டி வெள்ளி வென்ற தீரஜ் - கும்கும் ஜோடி
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் ரீகர்வ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா - கும்கும் மோஹோத் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. கடைசி அம்பு வரை அனல் பறந்த இந்த இறுதிப்போட்டியில் சீன ஜோடியிடம் 3-5 என்ற செட் கணக்கில் போராடி நூலிழையில் தங்கப் பதக்க வாய்ப்பை இந்திய ஜோடி தவறவிட்டது.
சீனாவின் தொடக்க ஆதிக்கம் நகோயாவில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா மற்றும் கும்கும் மோஹோத் கூட்டணி, சீனாவின் ஜு மற்றும் லி கூட்டணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் முதல் இரண்டு செட்களிலும் சீன வீரர்கள் அடுத்தடுத்து 10 புள்ளிகளை குவித்து அபார ஆதிக்கத்தை செலுத்தினர். இதனால் முதல் இரண்டு செட்களையும் கைப்பற்றிய சீனா 4-0 என வலுவான முன்னிலை பெற்றது.
தோல்வியின் விளிம்பில் நின்ற இந்திய ஜோடி 3வது செட்டில் அபாரமாக மீண்டு வந்தது. தீரஜ் மற்றும் கும்கும் இருவரும் மிகத் துல்லியமாக 10 புள்ளிகளை எய்து இந்திய அணியின் ஸ்கோரை 37 ஆக உயர்த்தினர்.
அழுத்தத்தில் ஆடிய சீன வீரர் லி 7 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால், 3வது செட்டை இந்தியா தட்டிச் சென்றது. இதனால் ஆட்டம் 4-2 என மாறியது. வெற்றியை தீர்மானிக்கும் 4வது செட்டில் இந்திய ஜோடி 37 புள்ளிகளை குவித்தது. தங்கத்தை வெல்ல சீன வீரர் லி தனது கடைசி அம்பில் கட்டாயம் 10 புள்ளிகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
கடுமையான அழுத்தத்திற்கு மத்தியில் சீன வீரர் எய்த அம்பு மிகச் சரியாக 10 புள்ளி கோட்டை தொட்டது. இதனால் 4வது செட் 37-37 என சமநிலையானது. முடிவில் சீன அணி 5-3 என்ற செட் கணக்கில் த்ரில்லர் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தையும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தகுதியையும் தட்டிச் சென்றது. கடைசி வரை சளைக்காமல் சிங்கமாக களத்தில் நின்று போராடிய இந்திய ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
முன்னதாக மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவில் தங்கம் வென்ற கும்கும் மோஹோத், தற்போது கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.