கோவையில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்': முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்குச் சொந்தமான 7 ஏக்கர் பரப்பளவில், சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையினரால் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான “பெரியார் அறிவுலகம்” (பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்) இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களால் முறைப்படி திறந்து வைக்கப்படுகிறது.
மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், உலகத்தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அறிவுசார் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
திட்ட ஒதுக்கீடு மற்றும் கட்டட அமைப்பு:
நிதிப் பகிர்வு: மொத்த திட்டச் செலவான ரூ.300 கோடியில், கட்டடப் பணிகளுக்கு ரூ.245 கோடியும், அச்சுப் புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.50 கோடியும், மின்-புத்தகங்கள் (e-books) கொள்முதலுக்கு ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பரப்பளவு மற்றும் பிளாக்குகள்: சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்கள் என மொத்தம் 8 தளங்களுடன், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாக (Blocks) இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெரியார் சிலை: நூலக வளாகத்தின் முகப்பில் தந்தை பெரியாரின் பிரம்மாண்ட திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தளத்திலும் உள்ள சிறப்பம்சங்கள்:
தரைத்தளம்: மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக நூலகம், 350 பேர் அமரக்கூடிய அதிநவீன குளிரூட்டப்பட்ட அரங்கம் (Auditorium), அறிவியல் உபகரணங்கள் கொண்ட அறிவியல் கூடம், விண்வெளியை அறிந்துகொள்ளும் வகையிலான கோளரங்கம் (Planetarium) மற்றும் பிரத்யேக ஸ்பேஸ் லிப்ட் (Space Lift) ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
முதல் & 2-ம் தளங்கள்: தகவல் வரவேற்பறை, நவீன அறிவியல் மையம், பொதுமக்கள் சொந்தமாகப் புத்தகங்கள் எடுத்து வந்து வாசிப்பதற்கான பிரத்யேக பகுதி மற்றும் குழந்தைகளுக்கான வண்ணமயமான நூலகம்.
3-ம் தளம்: டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி மையம், டிஜிட்டல் வகுப்பறைகள் மற்றும் நிர்வாக அலுவலகம்.
4-ம் தளம்: பல்லாயிரக்கணக்கான வரலாற்று நூல்கள், தமிழ் இலக்கியப் படைப்புகள் மற்றும் அரிய பருவ இதழ்கள் அடங்கிய காப்பகப் பிரிவு.
5, 6 மற்றும் 7-ம் தளங்கள்: சர்வதேச ஆங்கில நூல்கள், ஆங்கில மொழிப் பயிற்சி மையம், புதிய தொழில்முனைவோருக்கான ஸ்டார்ட்-அப் இன்குபேஷன் சென்டர்கள் (Incubation Centres), அறிவியல் ஆய்வகம் மற்றும் அதிவேக இணைய வசதி கொண்ட டிஜிட்டல் நூலகம்.
முதல்வர் வருகை மற்றும் பலத்த பாதுகாப்பு:
திறப்பு விழாவிற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் காலை கோவை விமான நிலையத்தை வந்தடையும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து கார் மூலம் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள பெரியார் அறிவுலகத்திற்குச் சென்று வளாகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி அவினாசி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் 3,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.