📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 15, 2026 06:00 AM

கன்னியாகுமரியில் டிசம்பரில் சர்வதேச அயலக தமிழர் மாநாடு

கன்னியாகுமரியில் டிசம்பரில் சர்வதேச அயலக தமிழர் மாநாடு

சென்னை: கன்னியாகுமாரியில், வரும் டிச., 25 முதல் 27ம் தேதி வரை, 5வது சர்வதேச அயலக தமிழர் மாநாடு நடக்கவுள்ளது.

சர்வதேச அயலக தமிழர் மாநாடு வரவேற்பு குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் பொதுசெயலர் தண்டபாணி, சர்வதேச அயலக தமிழர் மாநாடு வரவேற்பு குழு தலைவர் அருண் அழகப்பன், செயலர் முரளி மலையப்பன், அம்பா குழும தலைவர் அம்பா பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக, அகண்ட தமிழ் உலகம் அமைப்பு பொதுச்செயலர் தண்டபாணி அளித்த பேட்டி: அகண்ட தமிழ் உலகம் சார்பில், 5வது சர்வதேச அயலகத் தமிழர் மாநாடு, வரும் டிச., 25 முதல் 27ம் தேதி வரை, கன்னியாகுமரியில் நடக்கவுள்ளது. இம்மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பர் என, எதிர்பார்கிறோம். அறிஞர்கள், சமூக தலைவர்கள், தொழில் முனைவோர், இளைஞர் பிரதிநிதிகள், பண்பாட்டுத் துாதுவர்கள், ஆன்மிக தலைவர்கள் என, பல்வேறு தரப்பினர் பங்கேற்க உள்ளனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, நம் அனுபவங்களையும், வளங்களையும் பகிர்ந்து, ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை, இந்த மாநாடு உருவாக்கும். மாநாட்டின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் நிறுவனங்கள், அமைப்புகள், தனிநபர்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்பட, info@akhandatamilulgam.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சர்வதேச அயலக தமிழர் மாநாட்டின் செயலர் முரளி மலையப்பன் கூறியதாவது: கன்னியாகுமாரியில் டிச., 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்த பின்னர் தான், விவேகானந்தரின் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் பாரத தேசத்திற்கு மிக பெரிய நன்மைகள் ஏற்பட்டன. மற்ற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, நம் நாடு வளர வேண்டும். அந்த வளர்ச்சி, தமிழ் மண்ணில் இருந்து தொடங்க வேண்டும். அதற்காகவே இந்த மாநாடு. இவ்வாறு அவர் கூறினார்.

அம்பா குழும தலைவர் அம்பா பழனியப்பன் கூறியதாவது: தமிழர் ஒற்றுமை உலகம் எங்கும் ஒலிக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். கன்னியாகுமரியில் நடக்க உள்ள மாநாட்டில் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியப் பாதுக்காப்பு, மகளிர் மேம்பாடு மற்றும் தலைமைத்துவம், இளைஞர் வளர்ச்சி மற்றும் தலைமைத்துவம், தொழில், வர்த்தகம் உள்ளிட்ட நான்கு கருப்பொருள் குறித்து பேசப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.