கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்
டெஹ்ரான்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் நேற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அப்போது ஈரானின் 3 எண்ணெய் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரான் கடற்கரையில் இருந்து 26 கி.மீ. தொலைவில் கார்க் தீவு அமைந்துள்ளது. ஈரான் முழுவதும் இருந்து குழாய்கள் மூலம் இந்த தீவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எல்பிஜி, எல்என்ஜி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கார்க் தீவு விளங்குகிறது.
கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா, ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில் ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. அப்போது தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஈரான் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்க தாக்குதலில் எங்களது எண்ணெய் கப்பல்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. எனினும் கப்பல் மாலுமிகள், ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். அமெரிக்க ராணுவ தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று தெரிவித்தன.
அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “கடந்த ஒரு வாரமாக ஈரானின் ராணுவ தளங்கள், ரேடார்கள், கடல் கண்ணிவெடிகளை வீசும் படகுகள், தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சனிக்கிழமை மட்டும் 3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை தகர்த்துள்ளோம்” என்று தெரிவித்தன.
அமெரிக்கா, ஈரான் போர் குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, “உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது. அமெரிக்கா, ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்து வருவதால் இந்த ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதேநிலை நீடித்தால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரக்கூடும்” என்று தெரிவித்தனர்.
அணு சக்தி தளம் அழிக்கப்படும்: ட்ரம்ப்
ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் பிக்காக்ஸ்மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 330 அடி ஆழத்தில் நடான்ஸ் அணுசக்தி தளம் உள்ளது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் நடான்ஸ் அணுசக்தி தளம் மீது அமெரிக்க விமானப் படையின் அதிநவீன பி-2 போர் விமானங்கள் குண்டுகளை வீசின.
இந்த சூழலில் அதற்கு அருகே சுமார் 2 கி.மீ. தொலைவில் புதிதாக ஓர் அணு சக்தி தளம் செயல்பட தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறும்போது, “ஈரானின் பிக்காக்ஸ் மலைப் பகுதியில் விரைவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். அங்கு சந்தேகத்துக்குரிய அணு சக்தி தளம் அழிக்கப்படும்" என்று தெரிவித்தார்.