ஜெம் வீரமணி பாலியல் வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்: பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தல்
ஜெம் வீரமணி
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஜெம் கிரானை ட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம். காவல்துறை இந்த வழக்கை எந்தவித அழுத்தமும் இன்றி கையாள வேண்டும்.
பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும். பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், யாருக்கு தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பல ஆண்டு காலமாக இளம் பிஞ்சுகளை நாசப்படுத்திய ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் வீரமணி மட்டுமில்லாமல், இதற்கு துணை போனவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் கண்டறிந்து கைது செய்து குற்றக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். விசாரணையை விரைவு படுத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: பிரமுகர் போர்வையில் அலையும் இழிந்தோரின் செயல் எதுவரைக்கும் செல்லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்டியிருக்கிறது. பண பலத்துக்கு அஞ்சாமல் இதை வெளிக்கொண்டுவந்தவர்கள் நன்றிக்குரியவர்கள். இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் மீது அறத்தின் கரங்கள் இரக்கமின்றி நீளவேண்டும். இனியொரு சம்பவம் இதுபோல் நடக்கக்கூடாது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தொழிலதிபர் வீரமணி வழக்கில் 2024-ம் ஆண்டிலேயே உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசியல் பிரமுகர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணை நடத்தாதது ஏன்? என அடுத்தடுத்து எழும் கேள்விகளின் பின்னணியில் மிகப்பெரிய வலையமைப்பு இருக்கிறதோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, வழக்கின் விசாரணை நேர்மையான, வெளிப்படையான மற்றும் முழுமையான முறையில் நடைபெற ஏதுவாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.