"இந்திய பவுலிங் பயிற்சியாளரிடம் கேட்டால் உண்மை தெரிந்து விடும்".. தோற்றதால் கவாஸ்கர் ஆவேசம்
"இந்திய பவுலிங் பயிற்சியாளரிடம் கேட்டால் உண்மை தெரிந்து விடும்".. தோற்றதால் கவாஸ்கர் ஆவேசம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 249 ரன்கள் குவித்தும் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலிடம் கடுமையான கேள்விகளை எழுப்ப வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 249 ரன்கள் குவித்தது. ஆனால் 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷாய் ஹோப்பின் 45 பந்து சதம் மற்றும் ரூதர்போர்டின் 37 பந்துகளில் 84 ரன்கள் உதவியுடன் 9 பந்துகள் மீதமிருந்தபோதே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 501 ரன்கள் குவித்தது சர்வதேச டி20 வரலாற்றில் 2-வது அதிகபட்ச ரன் குவிப்பாக அமைந்தது.
இந்த அதிர்ச்சித் தோல்வி குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய சுனில் கவாஸ்கர், "இந்திய அணி 235 முதல் 240 ரன்கள் வரை எடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் பேட்டர்கள் கூடுதலாக 9 ரன்கள் சேர்த்து 249 ரன்கள் குவித்தனர். எனவே பேட்டர்கள் மீது எந்த தவறும் சொல்ல முடியாது. பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை சரியாகச் செயல்படுத்தவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரிடம் சென்று, 'பவுலர்களிடம் நீங்கள் என்ன திட்டத்தைக் கொடுத்தீர்கள்? அதை அவர்கள் களத்தில் செய்தார்களா?' என்று கேள்வி கேட்டால் உண்மை தெரியும்" என்று கவாஸ்கர் விளாசினார்.
அதே விவாதத்தில் பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன், "முதல் ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட்டுகளை இழந்த பிறகு, பவர்பிளேயில் அக்சர் படேலை பந்துவீச அழைத்தது முற்றிலும் தவறான முடிவு. புதிய பந்தை எதிர்கொள்ளத் திணறும் பேட்டர்களுக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்களையே தொடர்ந்து பயன்படுத்தியிருக்க வேண்டும்" என்றார்.
இதற்கிடையே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், கடுமையான பனிப்பொழிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டதால் இவ்வளவு பெரிய இலக்கையும் காப்பாற்ற முடியாமல் போனதாகத் தெரிவித்தார்.