ஈரான் கப்பல் மீதான தாக்குதல்
டெஹ்ரான்: ஈரான் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்டது.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்து உள்ளது.
இந்த சூழலில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவின் மீது அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியது. இந்த ஏவுகணைகள் நடுவானில் அழிக்கப்பட்டன.
ஈரானை பழிவாங்கும் வகையில் ஓமன் வளைகுடாவின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்று கொண்டிருந்த 3 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 கப்பல்களும் கடலில் மூழ்கின. இதில் ஒரு கப்பல் கடலில் மூழ்கும் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டது.
அதோடு வெளியிட்ட பதிவில், “ஓமன் வளைகுடா பகுதியில் ஈரானின் கைலோ கப்பல் கடலில் மூழ்குகிறது. கடலுக்கு அடியில் ஈரான் போர்க்கப்பல்கள் ஏற்கெனவே மூழ்கி கிடக்கின்றன. அந்த கப்பல்களுடன் கைலோவும் இணைகிறது. துல்லிய தாக்குதலை நடத்திய அமெரிக்க வீரர்களுக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 கப்பல்கள் மீது தாக்குதல்
இதுதொடர்பாக ஈரான் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்டின் 3 போர்க்கப்பல்கள் மற்றும் அமெரிக்காவோடு தொடர்புடைய 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லாத ட்ரோன் படகை தகர்த்திருப்பதாகவும் ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை
ஈரான் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் பேசியதாவது: ஈரானின் நலனுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். எங்களது பதில் தாக்குதல் அதிவிரைவாக நடத்தப்படும். இந்த தாக்குதல் மிக மோசமானதாக, அதிக வலியைக் கொடுப்பதாகவும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.