📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 07:00 PM

இசைஞானி டூ ராக்ஸ்டார்! அதிர வைக்கும் இசைக்கச்சேரி

இசைஞானி டூ ராக்ஸ்டார்! அதிர வைக்கும் இசைக்கச்சேரி

இசைஞானி டூ ராக்ஸ்டார்! அதிர வைக்கும் இசைக்கச்சேரி - எங்கே? எப்போது?

மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதனை அவ்வளவு எளிதில் மறந்திருக்க கூடாது என்று இசையமைப்பாளர் தேவா வேதனை தெரிவித்துள்ளார்.

Published : September 29, 2026 at 6:17 PM IST

சென்னை: இளையராஜா முதல் அனிருத் வரை பங்கேற்கும் இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் சங்கத்தின் "Reinvention Tour-Music of the millennium" நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர்கள் தேவா, கங்கை அமரன், ஸ்ரீகாந்த் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன்சங்கர் ராஜா, நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவர் செல்வமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், சென்னை ஆற்காடு சாலையில் உள்ள சினிமா இசைக்கலைஞர்கள் சங்க இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்ட, தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, அனிருத், யுவன்ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களும் இணைந்து இசைக்கச்சேரிகளை சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், “எந்த தொழிலாக இருந்தாலும், இசையோடு ஒன்றி இருப்பது மகிழ்ச்சி. அனைத்து இசையமைப்பாளர்களும் ஒரே இடத்தில் இசையமைப்பது மற்றும் கலந்து கொள்வது மிகச்சிறப்பானது. இந்த இசை நிகழ்ச்சியில் உலகில் உள்ள அனைவரும் கலந்து கொள்வார்கள். அனைத்து பாடகர்களும் இதில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படும். அனைவரையும் ஒரே ஃபிரேமில் காட்ட உள்ள இந்த ஒற்றை நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் தேவா, “மெல்லிசை மன்னரான எம்.எஸ்.விஸ்வநாதனை நாம் யாரும் இவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க கூடாது. இங்கு முதல் படமாக அவர் படத்தை வைத்திருக்க வேண்டும். அவர் போட்ட விதை தான், இன்று நாம் காரில் போகிறோம்” என்று தெரிவித்தார்.

இசை ஜாம்பவான் இளையராஜா

இதையடுத்து, நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும் போது, “இசையமைப்பாளர் சங்கம் என்பது ஒரு மூத்த சங்கம். நடிகர் சங்கமும் இந்த சங்கமும் ஒரே காலகட்டத்தில் உருவானவை. இசை இல்லையென்றால் சினிமாவே இருந்திருக்காது. என் 40 வருட சினிமா பயணத்தில் மிக மிக உன்னதமான காலங்கள் என்பது, நான் அவதாரம் படத்திற்கு இளையராஜா சாருடன் பணி செய்தது தான்.

அந்த படத்திற்காக போடப்பட்ட இசையில் இருந்து மிகப் பெரிய வாழ்க்கையை அவர் எனக்கு கற்றுக் கொடுத்தார். தமிழர்கள் வாழ்கின்ற எந்த பகுதிக்கு சென்றாலும், மனது கவலையாக இருக்கும்போதெல்லாம் ‘தென்றல் வந்து தீண்டும் போது பாட்டு தான் கேட்கிறோம்’ என்று சொல்கின்றார்கள். ஒரு நடிகருக்கு இசை சார்ந்த அடையாளம் கொடுத்த அந்த மாபெரும் இசை கலைஞருக்கு நன்றி சொல்லி தான் ஆக வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர். வி. உதயகுமார், “ஒரு யூனியனில் அனைத்து உறுப்பினர்களும் பிசியாக இருந்த ஒரே சங்கம் இசையமைப்பாளர் சங்கம் தான். இப்போது ஏ.ஐ வந்து விட்டது. விரைவில் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டவில்லை என்றால் பிரச்சனை உங்களுக்குத்தான்.

இளையராஜாவுக்கு முன் யாரும் நிற்க முடியாது. இசை ஜாம்பவான் என்றால் அது இளையராஜா தான். ஒவ்வொரு இயக்குநர்களின் வெற்றிக்கு பின்னாலும் 80 சதவீதம் இளையராஜா இருந்தார். நாமெல்லாம் வக்கிரமான மனிதர்களாக வாழாமல் இருப்பதற்கு காரணம் இசை தான்” என்றார்.