ஹர்திக் பாண்டியாவை கொடுத்துவிட்டு ஜெய்ஸ்வாலை மும்பை இந்தியன்ஸ் அனுப்ப நடந்த திட்டம்.. ஆனால் தோல்வி!
ஹர்திக் பாண்டியாவை கொடுத்துவிட்டு ஜெய்ஸ்வாலை மும்பை இந்தியன்ஸ் அனுப்ப நடந்த திட்டம்.. ஆனால் தோல்வி!
மும்பை: 2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களை அணி மாற்றம் செய்வதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 15 அன்று முடிவடைய உள்ளது. இந்தச் சூழலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே பல மாதங்களாகத் திட்டமிடப்பட்ட ஹர்திக் பாண்டியா - ஜெய்ஸ்வால் பரிமாற்றப் பேச்சுவார்த்தை திடீரென முடங்கியுள்ளது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ராஜஸ்தான் அணிக்கு அனுப்பிவிட்டு, அதற்குப் பதிலாக இளம் அதிரடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மும்பை அணிக்குள் கொண்டு வர ரகசிய ஆலோசனைகள் நடந்தன.
ஆனால் இரு அணிகளுக்கும் இடையே சுமூக முடிவு எட்டப்படாததால், இந்த ஒப்பந்தம் தற்போதைக்கு முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டம் பாதியில் நிற்க இரு வீரர்களின் தனித்துவமான மதிப்புதான் காரணம். ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு, தலைமைப் பண்பு என மூன்றிலும் கைகொடுக்கக்கூடிய அனுபவமிக்க வேகப்பந்து ஆல்ரவுண்டர். மறுபுறம் ஜெய்ஸ்வால் பல ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் அணியைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய அபாரமான தொடக்க ஆட்டக்காரர்.
இது போன்ற பெரிய நட்சத்திரங்களை இடமாற்றம் செய்வதில் அவர்களால் அணிக்கு என்ன பலம் என்பதை விட, அவர்களுக்கான சம்பளம் என்ன, அணி மாற்றத்துக்காக கொடுக்க வேண்டிய தொகை என்ன என்பதை பேசி முடிவு செய்வதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் இழுபறி நீடித்தது.
ஏற்கனவே தங்களது முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்குக் கொடுத்துவிட்டு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. இந்தச் சூழலில் ஜெய்ஸ்வாலையும் கழற்றிவிட்டால் அணியின் கட்டமைப்பே முற்றிலும் உடைந்துவிடும் என ராஜஸ்தான் ராயல்ஸ் தயங்கியது. மாற்று தொடக்க வீரராக தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரர் லூவான்-ட்ரே பிரிட்டோரியஸ் அணியில் உள்ளார். இவர் 2026 மேஜர் லீக் கிரிக்கெட்டில் 176 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 465 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தாலும், ஜெய்ஸ்வாலின் இடத்திற்கு அவர் ஈடாக மாட்டார் என ராஜஸ்தான் நிர்வாகம் தயக்கத்தில் இருந்தது.
மறுபுறம் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹர்திக்கை விட்டுக் கொடுத்தால் ஆல்ரவுண்டர் பலம் முற்றிலும் பறிபோய்விடும் என அஞ்சுகிறது. ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வரக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்தாலும், புதிய பயிற்சியாளரை இறுதி செய்த பின்னரே கேப்டன்சி பற்றி முடிவு செய்ய மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்புகிறது. நவம்பர் 15 இறுதி நாள் நெருங்கிவிட்டதால், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஹர்திக் - ஜெய்ஸ்வால் மெகா பரிமாற்றம் இனி நடக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது.