📅 Saturday, 20 June 2026 IST | ஆனி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports June 19, 2026 08:00 AM

ENG vs NZ: இங்கிலாந்தை கதற விட்ட கிளென் பிலிப்ஸ், மேட் ஹென்றி.. ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து

ENG vs NZ: இங்கிலாந்தை கதற விட்ட கிளென் பிலிப்ஸ், மேட் ஹென்றி.. ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து

ENG vs NZ: இங்கிலாந்தை கதற விட்ட கிளென் பிலிப்ஸ், மேட் ஹென்றி.. ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சாளர் மேட் ஹென்றியின் அதிரடி பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை (100 ரன்கள்) பதிவு செய்து அசத்தினார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய கைல் ஜேமிசன் 41 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வீசிய ஷார்ட் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, 8வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் பென் டக்கெட் 36 ரன்கள் எடுத்திருந்த போது, எமிலியோ கேயின் தவறான அழைப்பால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியைப் போல இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்திய எமிலியோ கே, 50 ரன்கள் எடுத்திருந்த போது ஓ ரூர்க் பந்துவீச்சில் அவுட்டானார்.

இதன்பின்னர் ஜோடி சேர்ந்த தற்காலிக கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை மீட்டனர். ஆனால், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய பந்தில் ஜோ ரூட் (46 ரன்கள்) மற்றும் ஹாரி புரூக் (24 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர். அறிமுக விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் ரீவ்வும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

2வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 222 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து அணியின் ஸ்கோரை விட இங்கிலாந்து இன்னும் 169 ரன்கள் பின் தங்கியுள்ளது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும், ஓ ரூர்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை தாண்டவில்லை என்றால் நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வெல்வது எளிதாக மாறிவிடும். இங்கிலாந்து அணியால் அழுத்தம் கொடுக்க முடியாது. எனவே, இங்கிலாந்து அணி பின்வரிசை வீரர்களை வைத்து 300 ரன்களை கடக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.