சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு மறியல் போராட்டம்
சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு மறியல் போராட்டம்
சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உக்கரம் ஊராட்சி மில்மேடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை என தெரிகிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் நேற்று காலை சத்தியமங்கலம் - காவிலி பாளையம் சாலையில் மில்மேடு பஸ் ஸ்டாப் அருகே 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.