📅 Saturday, 10 October 2026 IST | புரட்டாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 10, 2026 08:00 PM

சமய வழிகாட்டுதலையும் ஆதரவையும் சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் முயிஸ்

சமய வழிகாட்டுதலையும் ஆதரவையும் சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் முயிஸ்

முஸ்லிம் சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்குப் பள்ளிவாசல்கள் ஈடுகொடுக்கும் வகையில் இஸ்லாமிய ஆன்மிக பராமரிப்பு, வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கான கட்டமைப்பு அக்கம்பக்கச் சமூக ஆதரவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நம்பகமான சமய வழிகாட்டுதல், ஆன்மிகப் பராமரிப்பு, சமூக ஆதரவு ஆகியவற்றை பள்ளிவாசல்கள் வழங்குவதற்கான ஆதரவை சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), வலுப்படுத்தி வருகிறது.

சாஃப்ரா சுவா சூ காங்கில் சனிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்ற ‘ஒன் மாஸ்க் செக்டர் டவுன்ஹால்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது இது அறிவிக்கப்பட்டது.

இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளிவாசல் தலைவர்களும் சமய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது நிகழ்ச்சியைச் சிறப்பித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்த ஏற்பாடுகள்வழி முஸ்லிம்கள் தங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் உதவியையும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே விரைவாகப் பெற முடியும்.

பள்ளிவாசல்கள், ‘அசாட்டிஸா’ எனப்படும் சமய ஆசிரியர்கள், சமூகப் பங்காளிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றனர். அத்துடன், பள்ளிவாசல்கள் நம்பிக்கைமிக்க, மீள்திறன் கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கான முக்கியமான அடித்தளமாகும் என்று திரு ஸாக்கி குறிப்பிட்டார்.

“சமூகம் மாறிவரும் சூழலில், பள்ளிவாசல்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். மக்கள் எதை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை விரைவாகச் சென்றடைந்து, தேவையான வழிகாட்டுதலையும் ஆதரவையும் இணைக்க வேண்டும்,” என திரு ஸாக்கி கூறினார்.

எந்தவொரு பள்ளிவாசலும் தனியாக எதையும் செய்துவிட முடியாது என்றும் இணைந்து செயல்படுவதன் மூலம் சமூகத்தினர்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றி அவர்களுக்குச் சிறப்பான சேவை செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

முயிஸ் தனது ‘சமய உள்ளடக்க, வழிகாட்டுதல்’ பிரிவு, டோமா எனப்படும் ‘மாவட்ட முஃப்தி இணையாளர்கள் அலுவலகம்’ இரண்டின் மூலமாக பள்ளிவாசல்களில் நம்பகமான சமய வழிகாட்டுதல்களை மேம்படுத்தும் என அறிவிக்கப்பட்டது.

அத்துடன், நான்கு பள்ளிவாசல்கள் மாவட்டங்களிலும் செயல்படும் முஃப்தி இணையாளர்கள், உள்ளூர் தேவைகளுக்கேற்ப சமய வழிகாட்டுதல்களை வழங்குவர். அவர்கள் சமய அதிகாரிகளுக்கு வழிகாட்டிகளாகவும் இருப்பர். இது முஃப்தி அலுவலகத்திற்கும் பள்ளிவாசல்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும்.

மேலும், ஆன்மிக, வாழ்வியல் சவால்களை எதிர்கொள்வோர்க்கு ஆதரவளிக்க ‘இஸ்லாமிய ஆன்மிக அரவணைப்பு, வழிகாட்டுதல்’ கட்டமைப்பை முயிஸ் உருவாக்கி வருகிறது.

இது சமய ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் சமய அதிகாரிகளின் ஆன்மிகத் தேவைகளைக் கண்டறிந்து, சரியான சமய வழிகாட்டுதலை வழங்கவும் தேவைப்படும்போது தொழில்முறை, சமூகச் சேவைகளுடன் மக்களை இணைக்கவும் உதவும்.

முதற்கட்டமாக, நான்கு பள்ளிவாசல்களைச் சேர்ந்த சமய அதிகாரிகள் 20 பேருக்கு ஆன்மிகப் பராமரிப்பில் பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசல்கள் 2027 இரண்டாம் காலாண்டிற்குள் தயார்நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.