சிறையில் இருந்து வந்த 10 நாட்களில் வாய்ப்பு.. பெங்கால் கிரிக்கெட் அணியில் அபிஷேக் போரல் சேர்ப்பு!
சிறையில் இருந்து வந்த 10 நாட்களில் வாய்ப்பு.. பெங்கால் கிரிக்கெட் அணியில் அபிஷேக் போரல் சேர்ப்பு!
கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த வெறும் 10 நாட்களில் இளம் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் மீண்டும் பெங்கால் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பை தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில் விளையாடும் அணியில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி பிரபலமான விக்கெட் கீப்பர் பேட்டர் அபிஷேக் போரல் மீது இளம் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் உறவு கொண்டதாகவும், தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி மிரட்டியதாகவும் அந்த மாணவி போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 11 அன்று அபிஷேக் போரல் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் சின்சுரா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போரலின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றச்சாட்டுகளை ஆரம்பத்திலிருந்தே மறுத்து வந்த போரல், ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 18 அன்று அபிஷேக் போரலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளிவந்து வெறும் 10 நாட்களே ஆகியுள்ள நிலையில், 2026 ரஞ்சி கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெறவுள்ள பயிற்சி போட்டிகளுக்கான பெங்கால் அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்கால் அணி விவரம்: சுதீப் சாட்டர்ஜி (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், அன்குர் பால், அங்கித் சுக்லா, சுமந்தா குப்தா, சுபம் சாட்டர்ஜி, அபிஷேக் போரல், ஷாகிர் ஹபீப் காந்தி, பிரதீப்தா பிரமானிக், கரண் லால், ஆமிர் கனி, சௌமியாதிப் மண்டல், சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகமது கைஃப், கீத் பூரி, இஷான் போரல்.
பாலியல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே வந்த கையோடு, கிரிக்கெட் வாரியம் அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.