📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 19, 2026 04:34 PM

சிங்கப்பூர் தூய்மைப் பணியில் 500 இளையர்கள் பங்கேற்பு

சிங்கப்பூர் தூய்மைப் பணியில் 500 இளையர்கள் பங்கேற்பு

சிங்கப்பூர் முழுவதும் சனிக்கிழமை (செப்டம்பர் 19) ஒன்பது இடங்களில் நடைபெற்ற ‘லிட்டர் லிஃப்டர்ஸ்+’ எனும் குப்பை அகற்றும் தொண்டூழியப் பணியில் கிட்டத்தட்ட 500 இளையர்கள் பங்கேற்றனர்.

கடலோரப் பகுதிகள், நகர்ப்புற இடங்கள், நீர்வழிகள் ஆகியவற்றில் குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுச் சுகாதார மன்றமும் சிங்கப்பூர் இளையர் படை அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தன. உலகத் தூய்மை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அந்நிகழ்ச்சி, தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ‘தூய்மையான, பசுமையான சிங்கப்பூர்’ இயக்கத்திற்கும் ஆதரவளித்தது.

தூய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்குவதில் இளையர்கள் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என்பதே அம்முயற்சியின் நோக்கம்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹான் யான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன் இளையர்களுடன் சேர்ந்து துப்புரவுப் பணியிலும் ஈடுபட்டார்.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்பாஞ்ச்பாப்’ கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அடங்கிய ‘கிளீன் பாட்’ அருகில் குப்பைகள் அகற்றப்பட்டன.

பொது இடங்களில் குப்பை அகற்றும் கருவிகளைப் பகிர்ந்து பயன்படுத்துவதற்காக அவ்வித ‘கிளீன் பாட்’கள் உருவாக்கப்பட்டன. அவற்றின்மூலம் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தூய்மைப் பணிகளில் ஈடுபட முடியும்.

“இவ்வாண்டு மட்டும் தீவு முழுவதும் உள்ள 29 ‘கிளீன் பாட்’களை 994 அமைப்புகள் பயன்படுத்தியுள்ளன. மக்கள் தங்களின் சுற்றுப்புறத்தின் தூய்மைக்கு பொறுப்பேற்க வேண்டும் என விரும்புகிறோம். அமைப்பு சார்ந்த குழுவாக இருந்தாலும் சரி, இரு நண்பர்களாக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் ‘கிளீன் பாட்’களைப் பயன்படுத்தலாம். பொதுச் சுகாதார மன்றத்தின் இணையதளத்துக்குச் சென்று முன்பதிவு செய்தால் போதும்,” என்று பொதுச் சுகாதார மன்றத்தின் நிர்வாக இயக்குநரும் இணைப் பேராசிரியருமான கிறிஸ்டினா லியூ தெரிவித்தார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

‘கிளீன் பாட்’களில் தோட்டப் பயன்பாட்டுக்கான தள்ளுவண்டிகள், வாளிகள், எடை அளவுகோல்கள் ஆகியவை உள்ளன. கடற்கரைப் பகுதிகளில் உள்ள ‘கிளீன் பாட்’களில் சல்லடைகளும் உள்ளன என்று அவர் விளக்கினார்.

“நான் இலங்கையைச் சேர்ந்தவள். கடந்த எட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறேன். சிங்கப்பூர் தூய்மையாக இருப்பதற்கு என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று என் கணவருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன்,” என்றார் நிகழ்ச்சியில் இளையர் படையின் தொண்டூழியராகப் பங்கேற்ற 32 வயது ரொஷெல் சில்வா.

“எனது பணியும் படிப்பும் சுற்றுச்சூழல், நீடித்த நிலைத்தன்மையுடன் தொடர்புடையவை. அதனால், இதுபோன்ற தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுவதுடன் மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்துக் கற்பித்து வருகிறேன். அவர்களிடமும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.

“சிங்கப்பூரின் சுற்றுச்சூழல், நீடித்த நிலைத்தன்மை போன்றவை பற்றி இளையர்களைச் சிந்திக்க வைப்பதே எங்கள் நோக்கம். ‘கயாக்’ படகில் நம் நீர்வழிப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நான் நடத்த உதவுகிறேன் ,” என்று கூறினார் சிங்கப்பூர் இளையர் படையின் பணியாளரும் ‘லிட்டர் லிஃப்டர்ஸ்+’ தூய்மைப் பணியின் ஏற்பாட்டுக் குழுவினருமான 23 வயது காவியா பாண்டியன்.