📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 12, 2026 06:04 PM

சிங்கப்பூர் தொழிநுட்பக் கழகம் புதிய வாழ்நாள் கற்றல் பள்ளி உருவாக்கம்

சிங்கப்பூர் தொழிநுட்பக் கழகம் புதிய வாழ்நாள் கற்றல் பள்ளி உருவாக்கம்

மாறிவரும் தொழில் சூழலில் தனிநபர்கள் தங்களது எதிர்காலப் பாதையை வடிவமைத்துக் கொள்ளவும் நிறுவனங்கள் எதிர்காலத்துக்கு ஏற்ற ஊழியரணியை உருவாக்கிக் கொள்ளவும் உதவும் வகையில், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் புதிய வாழ்நாள் கற்றல் பள்ளியைத் தொடங்கியுள்ளது. திங்கட்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவின் முதன்மை நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

‘எஸ்ஐடிலெர்ன்’ என அழைக்கப்படும் இந்த வாழ்நாள் கற்றல் மற்றும் வாழ்க்கைத்தொழில் மேம்பாட்டுப் பள்ளி, திறன் மதிப்பீடு, தொடர்க் கல்வி, வாழ்க்கைத்தொழில் மேம்பாடு, தொழில்துறைப் பங்களிப்புகள், பயன்முறை ஊழியரணி ஆராய்ச்சி ஆகியவற்றை ஒரே ஒருங்கிணைந்த கட்டமைப்பின்கீழ் கொண்டுவரும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது.

“இத்தகைய வெவ்வேறான கூறுகளின் ஒருங்கிணைப்பும், செயல்முறை சார்ந்த கற்றலில் செலுத்தப்படும் கவனமுமே இந்த அமைப்புக்குத் தனித்துவத்தை அளிக்கின்றன என்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் தொழில்துறை மற்றும் சமூகப் பிரிவின் துணைத் தலைவரும் எஸ்ஐடிலெர்ன் பள்ளியின் பதிவாளருமான திரு பர்னர்ட் நீ தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தொடர்க் கல்வித் துறையில் பல பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பெரும்பாலானவை பயிற்சிகளை நடத்துவதிலும் தொழில்சார் பட்டப்படிப்புகளை வழங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வேகமாக மாறிவரும் இன்றைய சூழலிலும், திறன்களின் பயன்பாட்டுக் காலம் சுருங்கிவரும் காலகட்டத்திலும் அதுமட்டும் போதாது என்ற நோக்கில்தான் இந்தத் தொடர்க் கல்வி மற்றும் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

தற்போது பயிற்சிகள் பல்கலைக்கழக வளாகங்களிலும் வாடிக்கையாளர்களின் இடங்களிலும் நடத்தப்பட்டு வரும் நிலையில், பொங்கோல் வளாகத்தில் எஸ்ஐடிலெர்ன் அமைப்புக்காகவே சிறப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மையம் 2027ஆம் ஆண்டின் முதல் பாதியில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் வாய்ப்புகளையும் சவால்களையும் பற்றி பேசினார். அத்துடன் பட்டதாரிகள் தங்கள் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் அணுகுமுறையை வேலைகளில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தினார்.

பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தித் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம் சிறந்த பலன்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

தொடர் கற்றலில் ஈடுபட வேண்டும் என்றும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இணைந்து பணியாற்றுவதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டியோ கூறினார்.

தொழில்நுட்பம் எத்தணை ஆற்றல் பெற்றதாக மாறினாலும், மனிதர்களின் பகுத்தறியும் ஆற்றலே மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரம்புகளை உணர்ந்து, கற்றுக் கொண்ட அடிப்படை அறிவைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறிய அமைச்சர் டியோ, அனுதாபம், அறநெறி மற்றும் சூழலைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.