சிங்கப்பூர் புகைமூட்டத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு ஆலோசனைகள்
மக்கள் புகைமூட்டத்திலிருந்து தப்பிக்க அனைத்துச் சமூக மன்றங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வசிப்போர் குழுக்களிலும் உள்ள குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் தயார் நிலையில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) தெரிவித்துள்ளனர்.
காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டி, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) 200ஐத் தாண்டினால் அவ்வாறு செய்யப்படும் என்று அவர்கள் கூறினர்.
சிங்கப்பூரின் புகைமூட்டப் பணிக்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள அவசரகால நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
குறியீடு, 101ஐத் தாண்டும்போது காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்றது’ என்றும் 200க்கும் மேல் போனால் மிகவும் ஆரோக்கியமற்றது என்றும் 300-ஐத் தாண்டும்போது ‘அபாயகரமானது’ என்றும் கருதப்படுகிறது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டுப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை.
இருப்பினும், பாலர் பள்ளிகள் முதல் தொடக்கக் கல்லூரிகள் வரையிலான அனைத்துக் கல்வி நிலையங்களின் ஆசிரியர்களும் வரும் நாள்களில் உடல்நலம் குன்றிய அல்லது நுரையீரல் அல்லது இதய நோய்ப் பிரச்சினை உள்ள மாணவர்களைக் கவனமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளிலும் உயர் கல்வி நிலையங்களிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் காற்றுச் சுத்திகரிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெற்றோர், பிள்ளைகளுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தால் அதற்குத் தேவையான மருந்துமாத்திரைகள் கையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அவசியம் ஏற்பட்டால் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வுக் காலத்தில், காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை அல்லது அதைவிட மோசமடைந்தால் அனைத்து மாணவர்களும் காற்று சுத்திகரிப்பான்கள் கொண்ட அறைகளில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற வரம்பில் இருக்கும்போது, ஊழியர்கள் கடின உழைப்பில் ஈடுபடும் நேரத்தைக் குறைக்குமாறு வேலையிடங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. கனமான பொருள்களை அவர்களே தூக்குவதற்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவற்றுக்கு ஆலோசனை கூறப்பட்டது. ஒவ்வோர் ஊழியரும் வெளிப்புறத்தில் இருக்கும் நேரத்தைக் குறைக்கும் வகையில் பொறுப்புகளைச் சுழற்சி முறையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் பணிக்குழு கூறியது.
நாள்பட்ட இதய, நுரையீரல் பிரச்சினை உள்ள ஊழியர்கள் வெளிப்புறங்களில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இணையத்தளச் சேவை ஊழியர்கள், புகைமூட்டக் காலத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
பார்க்கும் தொலைவு குறைவாக இருக்கும்போது வாகனங்களை ஓட்டுவோர், முன்பக்க விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு நிலப் போக்குவரத்து வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வோரும் அவற்றில் பங்கெடுப்போரும் காற்றின் தரத்தைக் கண்காணித்து, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ கேட்டுக்கொண்டுள்ளது.
“வெளிப்புற, உட்புற விளையாட்டு நிலையங்கள் தொடர்ந்து திறந்திருக்கக்கூடும் என்றாலும் பொதுமக்கள் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. புகைமூட்டப் பணிக்குழுவுக்கு அதுவே தலைமை தாங்குகிறது.
கல்வி அமைச்சு, ஸ்போர்ட் சிங்கப்பூர், தற்காப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு உட்பட 28 உறுப்பினர்களைப் பணிக்குழு கொண்டுள்ளது.
தற்காப்பு அமைச்சு, அதன்கீழ் இயங்கும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் உள்துறை அமைச்சின்கீழ் இயங்கும் சீருடைப் பிரிவுகளும் நிலைமையைக் கையாளப் போதிய வளங்களைக் கொண்டுள்ளதாகக் கூறியது. புகைமூட்டச் சூழலுக்கு இடையே சிங்கப்பூரின் அமைதியையும் பாதுகாப்பையும் அவை தொடர்ந்து உறுதி செய்யும் என்றும் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
தேசியச் சுற்றுப்புற வாரியம், வெள்ளிக்கிழமையிலிருந்து அன்றாடம் புகைமூட்ட ஆலோசனைகளை வழங்கத் தொடங்கும். இதில் கூடுதல் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடும் அடங்கும். பொதுமக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கான தங்கள் நடவடிக்கைகளைத் திட்டமிட இதைப் பயன்படுத்தலாம்.